இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு..!
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டுக்குள் பல வழிகளில் ஊடுருவி கடுமையான தாக்குதல் நடத்தினர். உடனடியாக இஸ்ரேல் ராணுவமும் காசாவை தாக்கியது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.ஹமாஸ் படையினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு ‘அல்-அக்ஸா வெள்ளம் தாக்குதல்’ (‘ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்’) எனப் பெயரிட்டுள்ளனர்.
இஸ்லாமியர்களால் ‘அல்-ஹராம் அல்-ஷரீஃப்’ என்றும், யூதர்களால் ‘டெம்பிள் மவுண்ட்’ என்றும் அழைக்கப்படும் புனிதத் தலம், ஜெரூசலேமின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.இந்த வளாகத்தில்தான் இஸ்லாமியர்களின் ‘அல்-அக்ஸா மசூதி’யும் யூதர்களின் வழிபாட்டுச் சுவரும் உள்ளது.இஸ்லாமியர்களை பொருத்தவரை நபிகள் பயணத்தில் ஜெரூசலேம் இடம்பெற்றதாகக் கூறப்படுவதால் மெக்கா, மதீனாவுக்கு பிறகு மூன்றாவது முக்கிய வழிபாட்டுத் தலமாக அல்-அக்ஸாவைக் கருதுகின்றனர்.6-ஆம் நூற்றாண்டு முதல் அப்பகுதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், கடைசியாக 10-ஆம் நூற்றாண்டில் தற்போதுள்ள அல்-அக்ஸா மசூதி கட்டப்பட்டுள்ளது.
அதேபோல், ஜெரூசலேமில் இயேசு பல அற்புதங்களை நிகழ்த்தியதாக கூறும் யூதர்கள், ‘டோம் ஆஃப் தி ராக்’கை முதன்மையான வழிபாட்டுத் தலமாக கருதுகின்றனர்.இதன் காரணமாக இஸ்லாமியர்களும், யூதர்களும் அவ்வப்போது மோதிக் கொண்டே இருந்ததால், 1946-ஆம் ஆண்டு ஜெரூசலேமை சர்வதேச இடமாக அறிவிக்கலாம் என்று ஐ.நா. கோரிக்கை வைத்தது. ஆனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்தில் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த யூதர்களுக்கு 1948-ஆம் ஆண்டு தனி நாடு உருவாக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது. யூதர்களின் நாடாக இஸ்ரேல் உருவானது.இதற்கிடையே, 1948 முதல் 1967 வரை ஜெரூசலேமை கைப்பற்றி ஜோர்டான் நாடு ஆட்சி செய்து வந்தது. 1967-ஆம் ஆண்டு ஆறு நாள்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல்-ஜோர்டான் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அன்றிலிருந்து, ஜெரூசலேம் மற்றும் மேற்கு க் கரையின் மேலாதிக்கத்தை இஸ்ரேல் கைப்பற்றியது.
பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுக்குள் வைத்திருந்த இஸ்ரேல், அப்பகுதியிலிருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு முழுமையாக வெளி்யேறிய பிறகு நடைபெற்ற தேர்தலில், ஹமாஸ் அமைப்பு வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதுமுதல் ஹமாஸ் படை – இஸ்ரேல் ராணுவம் இடையே பதற்றம் நிலவி வருகிறது.அல் – அக்ஸா மசூதியின் மீது 50-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இஸ்ரேலைக் கைப்பற்றி பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஹமாஸ் படையினரும் கடந்த 18 ஆண்டுகளில் தற்கொலை படைத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஜெரூசலேமில் அண்மைக்காலமாக நாள்தோறும் சோதனை நடத்தும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அல் அக்ஸா மசூதிக்குள் புகுந்து சோதனை நடத்தியது இஸ்லாமியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், இஸ்லாமிய நாடுகளுடன் பல்வேறு அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீன எதிர்ப்புக்கு மத்தியிலும் மேற்கு கரைப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியிருப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.இதன் காரணமாக பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை விடுவிக்கும் நோக்கில் ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலை கடந்த வாரம் தொடங்கினர்.
ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் காசா நகரின் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. காசாவுக்கு அளிக்கப்படும் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.இதனால், காசாவைவிட்டு லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
உலக நாடுகள் எதிர்பார்க்காத இந்த போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்துள்ளனர்.தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர் விமானங்களும், போர்க் கப்பல்களும் களத்தில் இறங்கியுள்ளதால் உலக அரங்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாவிற்கு அருகில் உள்ள கடலோர பகுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.மக்கள் தங்களுக்கான பாதுகாப்பைத் தேடி காஸா பகுதியில் இருந்து அதன் அண்டை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர், ஐ.நா.வால் நிர்வாகிக்கப்படும் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.காஸா மக்களின் நிலைமை மேலும் மோசமாகி வருவதைக் கண்ட மனிதநேய ஆர்வலர்கள் அவர்களுக்கு உதவிகளை ஏற்படுத்தி தரக் குரல் கொடுத்து வருகின்றனர்.உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருள்கள் எதுவும் உள்ளே செல்ல இயலாதவாறு இஸ்ரேல் முழுமையாக காஸாவை முற்றுகை செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த ஒரே வழியான எகிப்தும் நேற்று (செவ்வாய்க் கிழமை) முதல் அடைப்பட்டுவிட்டது. காஸாவின் மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை இரு தரப்பிலும் 2100-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காஸா பகுதியை 2007 முதல் அதிகாரத்தில் வைத்திருக்கும் ஹமாஸ் குழுவை ஒடுக்கும் செயலில் மேலும் தீவிரம் காட்டி வருகிறது, இஸ்ரேல். இந்தச் சூழலால், காஸாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளதாக ஐ.நா. தெரிவிக்கிறது.
இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த 24 மணிநேரத்தில் காஸாவிற்கு அருகில் உள்ள அல்-பர்ஹான் பகுதியில் பல இலக்குகளைத் தாக்கியுள்ளது என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கிறது, இஸ்ரேல் இராணுவம்.மேலும், இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் ஹமாஸ் எதிர்த் தாக்குதல் நடத்தி வந்தது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளில் இருந்தும் பாலஸ்தீன் இராணுவம் தாக்குதல் நடத்தியது.லட்சக்கணக்கிலான இஸ்ரேல் மக்கள், ஹமாஸின் தாக்குதல் தொடங்கிய நாள் முதல் தங்கள் நாட்டுக்குள்ளாகவே இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.
Leave your comments here...