அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு – பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்!

அரசியல்

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு – பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்!

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு – பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்குப் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் பின்வருமாறு: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள், பாஜக கூட்டணியில் இருந்து விலக வலியுறுத்தினர். கே.பி.முனுசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. அதை எதிர்கொள்ள பாஜகவும் தனது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து பேசி வருகிறது. அவ்வாறு கடந்த 14-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்து பேசியுள்ளார்.

பாஜக தேசிய தலைமையின் அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 14-ம் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சுமார் 20 தொகுதிகளில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை பழனிசாமி ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை, கூட்டணி தர்மத்தை மீறி விமர்சித்து வருவதாக கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கடந்த 22-ம் தேதி டெல்லி சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அண்ணாமலையின் பதவியை பறிக்க வலியுறுத்தியதாகவும், அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

Leave your comments here...