நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் சேவை… பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்..!
திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இந்த ரயிலில் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை பயணித்தார்.
ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும், திருநெல்வேலி, மதுரை வழித்தட மக்கள் சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடு முழுவதும் இன்று 9 வந்தே பாரத் விரைவு ரயில்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வந்தே பாரத் ரயில் மூலம் அதிவேகமாக சென்னை சென்றடைய முடியும்.வந்தே பாரத் ரயிலானது உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 2009 முதல் 2014 வரை ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தக்கு இந்த ஆண்டு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ராமேசுவரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை ரயில் நிலையங்களை சீரமைப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9 வழி தடங்கள் எங்கே தெரியுமா?
1. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- உதய்பூர்
2. சென்னை- திருநெல்வேலி
3. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
4. விஜயவாடா – சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
5. பாட்னா – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
6. கேரளா மாநிலம் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
7. ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
8. ராஞ்சி – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
9. ஜாம்நகர்- ஆகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.அனைத்து இந்தியர்களும் புதிய இந்தியாவின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். சந்திரயான்-3 வெற்றியால் சாமானியர்களின் எதிர்பார்ப்பு விண்ணை எட்டியது.
ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றி மூலம் இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.பெண்கள் தலைமையிலான நமது வளர்ச்சியை உலகம் பாராட்டியுள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை மேம்படுத்தவே மகளிர் இட ஒதுக்கீடு அரசு கொண்டு வந்தது. இதனால் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு:- சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியதால், தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘ஏசி சேர் கார்’ கட்டணம் 1,700 ரூபாய். உணவு இல்லாமல், 1,355 ரூபாய் கட்டணமும், சொகுசு பெட்டியில் ஒருவருக்கு, 3,090 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, நேற்று முன்தினம் இரவில் துவங்கியது. குறிப்பாக, எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் பயணிக்க, பொது மக்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.
Leave your comments here...