காளஹஸ்தி கோவிலில் ராகு-கேது சிறப்பு பூஜை செய்த ஓ.பன்னீர்செல்வம்..!
அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சுப்ரீம் கோர்ட்டும், தலைமை தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் களத்தில் கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக ஓரம் கட்டப்பட்டிருக்கும் நிலையிலும் அவர் கட்சி கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்தியும் வருகிறார். இதற்கும் முடிவுகட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அ.தி.மு.க. கொடி மற்றும் பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஓ.பி.எஸ். பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ராகு-கேது பூஜை நடத்தினார். ஒரு காரியத்தை செய்யும்போது அதனால் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிவதற்காகவே ராகு-கேது பூஜையை மேற்கொண்டு விளக்கேற்றுவார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வம், அரசியல் களத்தில் தனக்கு ஏற்படும் தடைகளை தகர்ப்பதற்காகவே ராகு-கேது பூஜையை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையிலும் அவரால் மீண்டும் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்ள முடியாமலேயே போய்விட்டது. இதுபோன்ற சிக்கல்களில் இருந்து விடுபட்டு அரசியல் களத்தில் ஏறுமுகம் காண்பதற்கு வேண்டியே ஓ.பி.எஸ். பூஜை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Leave your comments here...