அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்கத் திட்டம்..!
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட், மோட்டார் பம்ப் போன்றவற்றை உள்ளடக்கிய காமன் சர்வீஸ் எனப்படும் பொது சேவை மின் இணைப்பு இருந்து வருகிறது. இதற்கு வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2022-ல் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கான மின் கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது. அதில், முதல்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8-ஆகவும், மாதம் நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 எனவும் தனி மின்கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தியது.
இந்த கட்டணம் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா, சமூக கூடம் ஆகியவற்றுக்கு பொருந்தும் எனவும் அறிவித்தது. இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின்கட்டண உயர்வால் சொந்த குடியிருப்புகள், தனிவீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மறுபடியும் பொது சேவை பிரிவுக்கான மின் கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 எனவும், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.102 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் இருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மின் கட்டணத்தை குறைக்க தொடர்ந்து கோரிக்கையும் விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் படி பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க மின்வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது- உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக 10க்கும் குறைவான வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையே பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக நிர்ணயிக்க மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave your comments here...