அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு – அமலாக்கத்துறை நீதிமன்றம் புதிய உத்தரவு.!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆகஸ்ட் 14ம் தேதி மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்துக்கு உடனடியாக மாற்றவும் உத்தரவிட்டிருந்தது.இதன்படி அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அமலாக்கத்துறையால், கைதாகியிருந்த நேரத்தில், தனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் அருண் குமார் ஆஜராகி, குறுகிய காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Leave your comments here...