அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!
அதிநவீன அம்சங்களுடன் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர் இந்தப் போர்க் கப்பலை நாட்டுக்கு அறிமுகம் செய்தார்.
கடற்படைக்காக `புராஜக்ட் 17 ஆல்ஃபா’ (பி17ஏ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 7-வது போர்க் கப்பல் மகேந்திரகிரியாகும். எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர்வு சாதனங்களுடன் கூடிய இந்தப் போர்க் கப்பல், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வல்லமையின் அடையாளமாக திகழும்.
பி17-ஏ திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போர்க் கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, கடந்த2019 முதல் 2022 வரை 5 போர்க் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
Hon’ble Vice-President, Shri Jagdeep Dhankhar addressed a gathering at the launch of Mahendragiri, the seventh ship of the Project 17A Frigates at Mazagon Dock Shipbuilders Ltd. in Mumbai today. #Mahendragiri @indiannavy pic.twitter.com/BhpDLCUtfx
— Vice President of India (@VPIndia) September 1, 2023
இந்த வரிசையில் 6-வதாக விந்தியகிரி என்ற போர்க் கப்பலைகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார். பி17ஏ போர்க் கப்பல்களின் கட்டுமானத்துக்காக 75 சதவீத உபகரணங்கள் மற்றும் இதர அமைப்பு முறைகள், உள்நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று அறிமுகம் செய்யப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் 149 மீட்டர் நீளம், 17.8 மீட்டர் அகலம் கொண்டதாகும். மேலும் 28 நாட்டிக்கல் மைல் வேகத்தில் கடலில் செல்லக் கூடிய சக்தி படைத்தது ஆகும்.
புதிதாகப் கட்டப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல், ஒரு தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அதிநவீன போர்க்கப்பலாகும். உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயார் செய்யப்பட்ட கப்பல்களில் மிகவும் முன்னேறிய வகையைச் சார்ந்தது. எனவே, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.
பி17-ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் எஞ்சியுள்ள கப்பல்கள் 2024 முதல் 2026-ம் ஆண்டுக்குள் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்திய பசுபிக் கடல் பகுதியில் சீனாவின் மக்கள் சுதந்திர ராணுவ-கடற்படையினரின் சவால்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...