மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து… ரயில்வேயின் அலட்சியமா..? – விபத்துக்கு முதல் காரணம்…?
உ.பி., லக்னோவில் இருந்து, 63 பேர் ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் முன்பதிவு செய்து, ஆக., 17 முதல் 29 வரை ஆன்மிக சுற்றுலாவை துவக்கினர்.இவர்களுக்கு ஒரு சிறப்பு ரயில் பெட்டி ஒதுக்கப்பட்டது. இப்பெட்டி ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லும் பல்வேறு ரயில்களில் இணைக்கப்பட்டு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணியர் சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 3:45 மணிக்கு மதுரை வந்தனர். இங்கிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இப்பெட்டி இணைக்கப்பட்டு, நாளை சென்னை சென்றும், அங்கிருந்து லக்னோவிற்கு ஆக., 29ல் திரும்புவதும் இவர்களின் பயண திட்டம்.இந்நிலையில், புனலுார் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று வந்த இப்பயணியரின் சிறப்பு பெட்டி கழற்றி விடப்பட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் மதுரை – போடி லைனில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டது.பெட்டியில் இருந்து சிலர் இறங்கி, ரயில்வே ஸ்டேஷன், கடைகளுக்கு சென்றிருந்த நிலையில், அதிகாலை, 5:15 மணியளவில் இப்பெட்டிக்குள் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.
அப்போது, பயணியர் அலறல் சத்தம் கேட்டு, போடி லைனை ஒட்டியுள்ள குடியிருப்பு மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் மளமளவென தீ கொளுந்து விட்டு எரிந்தது.உள்ளே வெடிக்கும் சப்தமும் கேட்டு, தீயின் தாக்கம் உக்கிரமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.தகவல் கிடைத்த சில நிமிடங்களில் தல்லாகுளம், திடீர் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணி நடந்தது.ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அப்போது உள்ளே இரண்டு சிலிண்டர்கள், விறகுகள் கிடந்தன. ஒரு கழிப்பறையில் பாத்திரங்கள், காய்கறிகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஏதுமறியாமல் வயதானவர்கள் படுக்கைகளில் துாங்கிக் கொண்டிருந்த நிலையில், மூச்சு திணறியும், தீயில் கருகியும் ஐந்து பெண்கள் உட்பட 9 பேர் இறந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.இதில், ஒருவரின் உடல் ஆணா, பெண்ணா என முடிவு செய்ய முடியவில்லை. உடல்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.காயமடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பெட்டியில் பயணித்தவர்கள் ரயில்வே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ரயில் பெட்டியில் மூன்று சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிந்தது. ஒரு சிலிண்டரில் டீ, காபி தயாரிக்க சிலர் முயற்சி செய்த போது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு காலி சிலிண்டர்கள், விறகுகள் பெட்டியின் கழிப்பறையில் கிடந்தன.காய்கறிகள், பாத்திரங்கள், பயணியரின் உடைமைகள் ரயில் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. உறவினர்களை பலி கொடுத்தவர்கள் கதறினர்.
மதுரை கோட்ட மேலாளர் அனந்த் தலைமையில் ரயில்வே அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் லோகநாதன், ரயில்வே பாதுகாப்பு எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
இந்நிலையில் மதுரை ரயில் தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “ரயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகளை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு வந்ததில் சட்ட விதிமீறல் நடந்துள்ளது. லக்னோவில் இருந்தே அவற்றை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர். கழிப்பறையில் கூட இந்த பொருட்களை மறைத்து வைத்துள்ளனர். சுற்றுலா ஏஜென்சி செய்த விதிமீறல்களை பயணிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். குற்றவாளிகளான தனியார் டிராவல் ஏஜென்சி நிறுவனம் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு பயணிகள் காரணமல்ல. முழு பொறுப்பும் டிராவல் ஏஜென்சியையே சேரும். அந்த ஏஜென்சிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சுற்றுலா பெட்டிகளை நாங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்வது வழக்கம். அப்படி சில சமயங்களில் சிலிண்டர் உள்ளிட்டவைகளை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு அடிக்கடி திடீர் பரிசோதனைகள் செய்யப்படும்” என்றார்.
இந்த நிலையில், மதுரை ரயில் தீ விபத்து குறித்து எம்.பி. சு வெங்கடேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சு வெங்கடேசன் கூறியதாவது..,“ரயில் தீ விபத்துக்கு ஆர்.பி.எஃப். தோல்வியே காரணம் என்று ரெயில்வே ஆலோசனை உறுப்பினர் என்ற அடிப்படையில் கூறுகிறேன். ரயில்களில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல, அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்பதை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தான் வாகனம் ரயிலில் அனுமதிக்கப்படுகிறது.
“”நாடு முழுக்க எந்த ரயில் நிலையத்திலும் உள்ள கடைகளில் கியாஸ் அடுப்பு பயன்படுத்தக்கூடாது. மின்சார அடுப்பையே பயன்படுத்த வேண்டும். இத்தகைய கடுமையான விதிகள் அமலில் இருக்கும் போது, இந்த விபத்துக்கு சொல்லப்படும் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் கொண்டுவந்த ஒரு பொருளால் மட்டும் இந்த விபத்து ஏற்படவில்லை.
” “தீப்பற்றக்கூடிய பொருட்களை இயிலில் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதி இருக்கும் போது பத்து நாட்களாக கியாஸ் சிலிண்டரோடு தென்னிந்தியா நெடுக ஒரு ரயில் பெட்டி பயணித்திருக்கிறது என்றால் ஆர்.பி.எஃப். சோதனைப்பணி என்பது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றே பொருள். இந்த விபத்து ரயில் பயணத்தின் போது ஏற்பட்டு இருந்தால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரும் விபத்தாக மாறி இருக்கும். இந்த விபத்துக்கு முதல் காரணம் ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வி தான் ஆகும்,” என்று அவர் தெரிவித்தார்.
Leave your comments here...