நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்.. ஒருபுறம் சிங்களக் கடற்படை – ராமதாஸ்..!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர்.
பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் நள்ளிரவில் ஆறுக்காட்டுதுறை கடற்கரைக்கு திரும்பினர். தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பாஸ்கர், அருள்ராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் வேதாரண்யம் அடுத்த வெள்ளபள்ளம் கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் அருள்செல்வம் என்பவரையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பைபர் படகில் இருந்த பொருட்களை பறித்து சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அருள்செல்வம் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மொத்தம் ஒரே இரவில் 6 படகுகளை வழிமறித்து 8 மீனவர்களை கொடூரமாக தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பாஸ்கர் என்ற மீனவரின் மண்டை பிளந்து 21 தையல் போடப்பட்டுள்ளது. 5 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளையும், மீன்களையும் கொள்ளையடித்துள்ளனர். கடல் கொள்ளையர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவிலும் இதே பகுதியில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகும் முன்பே இலங்கைக் கடல் கொள்ளையர்கள் அடுத்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவே அஞ்சுகின்றனர். ஒருபுறம் சிங்களக் கடற்படையினர், இன்னொருபுறம் இலங்கைக் கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாவதை மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இனியும் அமைதி காத்தால் தமிழக மீனவர்கள் மீதான கடல் கொள்ளையர்கள் மற்றும் சிங்களப் படையினரின் அத்துமீறல்கள் அதிகமாகி விடும்.
இது இந்தியாவின் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். உலகின் மிக பயங்கரமான கடல் கொள்ளையர்களாக கருதப்படும் சோமாலியா கடற்கொள்ளையர்களையே ஒடுக்கிய பெருமை இந்திய கடற்படைக்கு உண்டு. அவர்களுடன் ஒப்பிடும்போது இலங்கை அரசின் ஆதரவுடன் செயல்படும் இலங்கை கடல் கொள்ளையர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அவர்களின் தொடர் அட்டகாசத்தை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இந்தியாவை ஒட்டிய கடல் பகுதிகளில் கைவரிசை காட்டும் கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். எனவே, அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...