3டி தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட தபால் அலுவலகம் – திறந்து வைத்த மத்திய அமைச்சர்..!
இந்தியாவின் முதல் முப்பரிமாண (3D)தபால் அலுவலக கட்டடம் பெங்களூருவில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அல்சூர் பஜார் கேம்பிரிட்ஜ் லே அவுட்டில் 3டி முப்பரிமாண தபால் அலுவலக கட்டடம் 1100 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் “3டி தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவ்ர், இது ஒரு பெருமையான தருணம் என தெரிவித்தார்.
இந்த அஞ்சலக புதிய கட்டடத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, நமது நாட்டின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்று என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) குவஹாத்தி, உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்திற்காக 3டி-அச்சிடப்பட்ட சென்ட்ரி போஸ்ட் கட்டப்பட்டது. ஏப்ரல் 2021 இல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் 3டி வீட்டை சென்னையில் திறந்து வைத்தார், இது ஐஐடி-மெட்ராஸ் வளாகத்திற்குள் அமைந்துள்ளது.
மேலும், உலகின் முதல் 3டி இந்து கோவில் தெலங்கானாவில் கட்டப்பட்டு வருகிறது. சித்திப்பேட்டை அருகே 3,800 சதுர அடி பரப்பளவில் கோயில் அமையவுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த அப்சுஜா இன்ஃப்ராடெக் நிறுவனம், 3டி- கட்டுமான நிறுவனமான சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமானத்தில் 3டி பிரிண்டிங், கட்டுமானப் பொருட்களை அடுக்குகளில் வைப்பதற்கும், சுவர்கள், தரைகள் மற்றும் கூரைகளை உருவாக்குவதற்கும் ரோபோ அமைப்பு பயன்படுத்துகிறது.
பாரம்பரிய முறைகளைப் போலல்லாமல், 3D கட்டமைப்புகளை உருவாக்குவது வேகமானது. உதாரணமாக, 2,000 சதுர அடி வீடு, வழக்கமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டுவதற்கு நான்கு மாதங்கள் எடுக்கும் என்றால் 3D மூலம் 7 முதல் 10 நாட்களுக்குள் கட்ட முடியும். இதற்காக செலவும் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...