மீண்டும் பிரதமராக மோடி… இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு – கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்..!
பாராளுமன்றத்திற்கு இன்றே தேர்தல் நடந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் எனவும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வரவாய்ப்புள்ளதாக டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்தாண்டு (2024) ஏப்., – மே மாதங்களில் லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதை எதிர்நோக்கி நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செய்துள்ள சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அடுத்த ஆண்டு ஆக., 15ல், இதே செங்கோட்டையில் இருந்தபடி, நாடு அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் சாதனைக்கான பட்டியலை, உங்கள் முன் பட்டியலிடுவேன் என்றார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றத்திற்கு இன்றே தேர்தல் நடந்தால் அடுத்து யார் பிரதமராக வருவார் என ஆங்கில டி.வி. செய்தி சேனலான டைம்ஸ்நவ், இ.டி.ஜி., கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:பாராளுமன்ற லோக்சபாவிற்கு இன்றே தேர்தல் நடந்தால், பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி 296 லிருந்து 326 இடங்களில் வெற்றி பெறும் எனவும், 26 கட்சிகள் இணைந்து எதிர்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் இக்கூட்டணி 160 முதல் 190 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதால். 2024 தேர்தல் தே.ஜ. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் எனவும், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி செல்வாக்கு மிக்க பிரதமராக வர வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக பொறுப்பேற்று நேருவின் சாதனையை மோடி சமன் செய்வார் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியிலும் சேராத மாநில கட்சிகள் எப்படி ?ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங். கட்சி 24 முதல் 25 எம்.பி. தொகுதிகளிலும், தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகராவின் பாரத் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 9 முதல் 11 எம்.பி. தொகுதிகளிலும், ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள கட்சி 12 முதல் 14 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
Leave your comments here...