அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. அதிகாரிகள் துன்புறுத்தவில்லை – அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் மற்றும் 3,000 பக்கத்திற்கு ஆதாரங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்..
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற அனுமதியின் பேரில் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சற்று உடல்நலம் தேறிய நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் கடந்த 7ஆம் தேதி இரவு தங்களது கஷ்டடியில் எடுத்து நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த 5 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பண மோசடி வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறையினர் கேட்டு அதற்கு பதில் பெற்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை வாக்குமூலம் ஆகியவை எழுத்து மூலமாகவும், வீடியோ மூலமாகவும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 5 நாள் அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அமைச்சர் செந்தில்பாலாஜியை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக செய்தியாளர்கள், விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தினார்களா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை என சைகியில் செந்தில்பாலாஜி பதிலளித்தப்படி சென்றார்.
இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையுடன், 3,000 பக்க ஆதார ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து, அமலாக்கத்துறையினர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்தக் குற்றப் பத்திரிக்கையில் முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருப்பதாகவும் அவர் பெயர் தவிர அவரது சகோதரர் அசோக் குமார் உட்பட வேறு யார் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தக் குற்றப் பத்திரிகையில் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், சட்டவிரோத வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Leave your comments here...