பக்தர்களின் வசதிக்காக சதுரகிரி கோயிலில் தங்கும் விடுதி – வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட டெண்டர்..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் மலை உச்சியில் 1 கோடியே 29 லட்ச ரூபாய் செலவில் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்ட இரண்டாம் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இத்திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். மேலும் 18 சித்தர்களும் இங்கு வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ததாகவும், இன்றும் ஏராளமான சித்தர்கள் அரூபமாக இப்பகுதியில் சுற்றி வருவதாக நம்பப்படுகிறது.
இத்திருக்கோவிலுக்கு செல்வதற்கு மதுரை மாவட்டம் சாப்டூர், விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை ஆகிய இரு வழிகள் இருந்தாலும் பிரதான வழியாக விருதுநகர் மாவட்ட வழியாக செல்லும் தாணிபாறை பாதையையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வருடம் முழுவதும் திருக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், வெள்ளப்பெருக்கிற்கு பின் மாதம் தோறும் பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி, ஆகிய தினங்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மலையில் ஏறவும், மலையிலிருந்து கீழே இறங்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மலை உச்சியில் பக்தர்கள் தங்குவதற்காக வனத்துறை சார்பில் 5 தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக இந்து அறநிலைத்துறை சார்பில், சுமார் 1 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்ட ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது.
கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் வரும் 23ஆம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் 24 ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது இரண்டாம் கட்ட அறிவிப்பை இந்து அறநிலைத்துறை வெளியிடப்பட்டுள்ளது. 24ஆம் தேதி ஒப்பந்தம் வழங்கப்படும் சூழலில் விரைவில் கட்டுமான பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave your comments here...