இந்தியாவின் நம்பர்-1 செஸ் வீரரான குகேஷ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ள தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
உலக தரவரிசை பட்டியலில் 2755.9 ரேட்டிங் உடன் தற்போது 9-வது இடத்தில் உள்ளார். இது லைவ் ரேட்டிங் ஆகும். விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 ரேட்டிங் உடன் உள்ளார். குகேஷுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1-ம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தால், 1986-க்கு பிறகு உலகத் தரவரிசையில் ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயதான குகேஷ் சென்னையை சேர்ந்தவர். இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர். கடந்த 2019-ல் இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றார். 16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார். மிக இளம் வயதில் 2750 லைவ் ரேட்டிங்கை எட்டிய வீரர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார்.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “FIDE செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டுகள். உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தியுள்ளன. உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
Leave your comments here...