பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 4 மாத ஆண் குழந்தை : கேரளாவில் மீட்பு – கணவன் மனைவி கைது..!
- July 27, 2023
- jananesan
- : 311
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ஊசி, பாசி மாலை போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள் தங்கி வருகிறார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு மாத ஆண் குழந்தையுடன் தங்கி இருந்தார்.
இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையை அருகில் வைத்துவிட்டு தூங்கினார்கள். நள்ளிரவு கண்விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முத்துராஜ் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஆண் ஒருவரும் முத்துராஜின் குழந்தையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரெயில் மூலமாக குழந்தையை கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. குழந்தையை மீட்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குழந்தை கடத்தப்பட்டது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலம் சிறையின் கீழ் ரயில் நிலையத்தில் ஒரு தம்பதியர், குழந்தையுடன் சந்தேகப்படும்படி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கேரள போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். குழந்தை மீட்கப்பட்டது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் குழந்தையையும், கைது செய்யப்பட்ட 2 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 48), அவரது மனைவி சாந்தி என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட குழந்தையை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு வெகுமதிகளை வழங்கினார்.
Leave your comments here...