மணிப்பூர் போல ராஜஸ்தானிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : அமைச்சர் நீக்கம்- சட்டசபைக்குள் விடாமல் தாக்குவதாக குற்றச்சாட்டு..!

அரசியல்

மணிப்பூர் போல ராஜஸ்தானிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : அமைச்சர் நீக்கம்- சட்டசபைக்குள் விடாமல் தாக்குவதாக குற்றச்சாட்டு..!

மணிப்பூர் போல ராஜஸ்தானிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : அமைச்சர் நீக்கம்- சட்டசபைக்குள் விடாமல் தாக்குவதாக குற்றச்சாட்டு..!

ராஜஸ்தான் : பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தனது சொந்த அரசையே விமர்சித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜேந்திர சிங் குத்தா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவரை சட்டசபைக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தடுப்பதாகவும், அடித்து, உதைத்து, தாக்கியதாகவும் ராஜேந்திர சிங் குத்தா குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் சட்டசபையில் சமீபத்தில் ஒரு மசோதா மீதான விவாதத்தின்போது, மணிப்பூர் வன்முறைகள் குறித்து ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரச்னையை எழுப்பினர். இதற்கு மாநில ஊர்க்காவல் படை, சிவில் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் இணை அமைச்சரான ராஜேந்திர சிங் குத்தா ஆட்சேபம் தெரிவித்தார்.

அவர் பேசுகையில்:-நாமும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எனவே மணிப்பூர் பிரச்னையை எழுப்புவதற்கு பதிலாக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார்.சொந்த கட்சியையே அமைச்சர் ஒருவர் விமர்சித்தது ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜேந்திர சிங் குத்தாவை அமைச்சரவையில் இருந்து அசோக் கெலாட் நீக்கினார்.

இது குறித்து ராஜேந்திர சிங் கூறுகையில், ‘எனது இறுதி மூச்சு வரை உண்மையை பேசுவேன். எனது போராட்டம் பா.ஜ.,வுக்கு எதிரானது. எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 20 வயது பெண் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நான் பேசினேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் நம்பர் ஒன். முதல்வர் என்னை பதவி நீக்கம் செய்த விதம் அவமானகரமானது; அதற்கு பதிலாக ராஜினாமா செய்யும்படி கூறியிருக்க வேண்டும்’ என கண்ணீருடன் கூறினார்.

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 24) சட்டசபைக்கு வந்த ராஜேந்திர சிங் குத்தாவை, பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராடியும் சட்டசபைக்குள் அவரால் நுழைய முடியவில்லை.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுமார் 50 பேர் என்னைத் தாக்கினர், அடித்தனர், உதைத்தனர், காங்கிரஸ் தலைவர்கள் என்னை சட்டசபையில் இருந்து வெளியே தள்ளினர். நான் பா.ஜ.,வில் இருப்பதாக என் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் என்னுடைய தவறு என்ன என்பது தெரியவில்லை.நான் எனது சிவப்பு டைரியை சபாநாயகரிடம் வழங்க விரும்பினேன். ஆனால் அவர் என்னை பேச அனுமதிக்கவில்லை.

காங்கிரஸ் தலைவர் சாந்தி குமார் தரிவால் என்னைத் தள்ளிவிட்டார், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் என்னுடன் சண்டையிட்டு டைரியின் சில பக்கங்களை எடுத்துச் சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...