மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை : குற்றம் செய்தவர்களை தப்பிக்க விடமாட்டேன் – பிரதமர் நரேந்திர மோடி
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது; எனது இதயம் கனத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை குறிவைத்து 26 எதிர்க்கட்சிகளும், பாஜ கூட்டணி கட்சிகளும் ஒரே நாளில் போட்டிக் கூட்டம் நடத்திய நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஏவி விடுவது, ஆளுநர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் நாடாளுமன்றத்தில் புயல் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
நாட்டு நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள்:நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன். நாட்டு நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.
சிறந்த சட்டங்களை உருவாக்க விவாதங்கள் அவசியம்: இன்று தொடங்கும் கூட்டத்தொடரில் மக்களுக்கு பயன் உள்ள பல சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. சிறந்த சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்தில் விவாதங்கள் அவசியம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
மணிப்பூர் கலவரம்: பிரதமர் மோடி; மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதைக் கண்டு பெரும் கோபம் ஏற்படுகிறது. மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது; எனது இதயம் கனத்துள்ளது. அனைத்து மாநில முதல்வர்களும் இந்திய பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடி தெரிவித்தார். மணிப்பூரில் 2 மாதத்துக்கு மேலாக கலவரம் நடந்துவரும் நிலையில் பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார்.
குற்றம் செய்தவர்களை தப்பிக்க விடமாட்டேன்: மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை என்றும் மன்னிக்க மாட்டோம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட மாட்டோம், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டு தான் கோபத்தில் இருப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். யாராக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பிரதமர் நரேந்திர கண்டனம் தெரிவித்தார். பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
மணிப்பூர் கொடூரங்களுக்கு பிரதமர் மோடி கண்டனம்: மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
Leave your comments here...