கடத்தப்பட்ட 105 பழங்கால கலைப் பொருட்கள் – இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைத்தது அமெரிக்கா!
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால 105 கலைப் பொருட்களை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண் ஜித்சிங் முன்னிலையில் இவை ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண் ஜித்சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால கலைப்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 105 இந்திய பழங்கால பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டு உள்ளதாக இந்திய தூதர் தரண்ஜித்சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய மக்களை பொறுத்தவரை பழங்கால பொருட்கள் வெறும் கலைப் பகுதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க மான்ஹாட்டன் மாவட்ட நிர்வாகம், சிலை தடுப்பு பிரிவு, உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
பழங்கால பொருட்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப்பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால பொருட்கள், மத்திய இந்தியாவில் இருந்து 22 கலைப்பொருட்கள், வட இந்தியாவில் இருந்து 6 பொருட்கள் மற்றும் மேற்கு இந்தியாவில் இருந்து 3 கலைப்பொருட்கள் அடங்கும் என்றார். மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி.2 முதல் 3-ம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 18-19-ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களை சேர்ந்தவை ஆகும். டெரகோட்டா, கல், உலோகம், மரத்தால் செய்யப்பட்டவை, சுமார் 50 கலைப்பொருட்கள் இந்து, ஜெயின் மற்றும் இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைவை. மற்ற பொருட்கள் இந்திய கலாச்சாரத்தின் தொன்மையையும் முக்கியத்துவத்தையும் குறிக்கும் வகையிலானது” என்று அவர் தெரிவித்தார்.
இந்திய பராம்பரியம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடத்தப்பட்ட 105 கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்ததற்காக அமெரிக்காவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
This will make every Indian happy. Grateful to USA for this. These precious artefacts hold immense cultural and religious significance. Their homecoming is a testament to our commitment to preserving our heritage and rich history. https://t.co/uUpIalYNga
— Narendra Modi (@narendramodi) July 19, 2023
வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார்:- “இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும். இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி. இந்த விலைமதிப்பற்ற கலைப் பொருட்கள் மகத்தான கலாச்சாரம் மற்றும் மத ரீதியான சிறப்பு கொண்டவையாகும். இவை மீண்டும் நாடு திரும்பியிருப்பது நமது பாரம்பரியம் மற்றும் வளமான வரலாற்றை பாதுகாக்கும், நமது உறுதிபாட்டிற்கு அத்தாட்சியாகும்”
Leave your comments here...