சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு சென்னை மருத்துவமனையும், மதுரை நூலகமும் சான்று – கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், “சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும்” என்றார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை அடுக்கிய அவர் பேசியது:
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகாதாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஜூலை 15-ஆம் நாளான இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்திருக்கின்றேன்.
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.
தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என்றால், இந்த மதுரை, தமிழ்நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் அவர் தம்பி கலைஞர். இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்திருக்கிறேன்.
இந்த நூலகத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத்தமிழ் இயற்றிய மாமதுரையில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.
சிலப்பதிகாரம் குறித்தும் காற்சிலம்போடு நீதி கேட்ட கண்ணகி குறித்தும் கலைஞர் தீட்டாத எழுத்து ஓவியங்கள் இல்லை. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட இந்த நகரத்தில் லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது. திராவிட இயக்கம் என்றாலே அறிவியக்கம்தான்.
படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்று பிரம்மாண்டமான நூலகங்களை கட்டியெழுப்பிக் கொண்டு இருக்கிறோம். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில், 120 கோடியே 75 இலட்ச ரூபாய் மதிப்பில் இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அழகாகவும், அற்புதமாகவும் உருவாக்கிக் கொடுத்த எதிலும் வல்லவர் என்று அழைக்கப்படும், நம்முடைய பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுயும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
பொதுப்பணி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட இந்த நூலகம் இவ்வளவு பிரம்மாண்டமாக அமைய கடுமையாக உழைத்திருக்கக் கூடிய கடைக்கோடி மனிதர்கள் வரை அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பொறுப்பேற்று இருக்கின்ற கடமையையும் தாண்டி, உள்ளார்ந்த அக்கறையும் ஆர்வமும், ஒவ்வொருவருக்கும் இருந்தால்தான் இவ்வளவு நேர்த்தியாக ஒன்றை உருவாக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, தமிழினத் தலைவர் கலைஞர் மேல் வைத்திருக்கின்ற அன்பின் வெளிப்பாடுதான் இந்த நூலகம்.
Deeply grateful to @HCLTech Founder Thiru Shiv Nadar and Chairperson Tmt Roshni for gracing the inauguration of #KalaignarCentenaryLibrary in Madurai. Their esteemed presence not only inspired the students but also brought forth cherished memories as Thiru Shiv Nadar fondly… pic.twitter.com/p3qxuCsORa
— M.K.Stalin (@mkstalin) July 15, 2023
ஷிவ் நாடாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பெரிதாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், இவரையும், இவரது மகள் ரோஷினியையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றேன். மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை; இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகைளை நன்கொடையாக வழங்கக் கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர் அவர்.
“உனக்கு பணம் வரும்போது அதிகப்படியானவர்களுக்கு உதவி செய்ய” வேண்டும் என்று இவருடைய தாயார் சொன்னார்களாம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் வேலை பார்க்கின்ற அளவுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தினுடைய நிறுவனரான இவரும் உங்களைபோல அரசுப் பள்ளியில் படித்தவர்தான். பல கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு கிராமத்தில் பிறந்து, மாநகராட்சி பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இன்றைக்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
அவருடைய மகள் ரோஷினி, அந்த நிறுவனத்தினுடைய இயக்குநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாகவும், இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் முதலில் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய நன்றி! நன்றி! நன்றி!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக்கும், குழந்தைகள் – மாணவர்கள் – போட்டித் தேர்வர்கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆறு தளங்கள் – மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களின் பசியை போக்க ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “புதுமைப்பெண் திட்டம்”. வருகிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” தொடங்கப் போகிறோம்.
தகுதியுடைய குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறுவார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே, இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான, மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறோம். இந்தியாவில், மற்ற மாநிலங்களும் நம்மை பின்பற்றக்கூடிய அளவிற்கு மகத்தான திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.
நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் ‘திராவிட மாடல்’ கோட்பாடு இதுதான். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஆட்சிப் பொறுப்பின் மூலமாக அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.
மக்களுக்கு பணி செய்ய, தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பாகதான் ஆட்சிக்கு வந்து இருப்பதையும், முதலமைச்சர் என்கின்ற நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் நான் நினைக்கிறேன். தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறி இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக ஆனது என்று சொல்லவேண்டும். அந்த ஒற்றை இலக்குடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களின் அரசாக, அனைத்து தரப்பு மக்களும் போற்றும் அரசாக நமது தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Leave your comments here...