அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள்- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் எழுதி உள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பணவீக்கத்தால் விலை உயர்ந்துள்ளதாகவும், விலை உயர்வு நிலைமையை மேலும் மோசமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமை பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுவதாகவும், சில உணவு பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், மத்திய அரசின் கையிருப்பில் உள்ள கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றில், மாதத்துக்கு தலா 10 ஆயிரம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது குறித்துமத்திய உணவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
Leave your comments here...