பொது சிவில் சட்டம் அவசியம்: பிரதமர் மோடி பேச்சுக்கு முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு

இந்தியா

பொது சிவில் சட்டம் அவசியம்: பிரதமர் மோடி பேச்சுக்கு முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு

பொது சிவில் சட்டம் அவசியம்: பிரதமர் மோடி பேச்சுக்கு முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு

Mhr>பொது சிவில் சட்டம் முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவெடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த வாரியத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்திய சில மணி நேரத்தில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் அவசரக்கூட்டம் ஆன்லைனில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் சாதி, மதம், வழிபாடுகளைப் பொருட்படுத்தாமல், பொதுவான ஒரு சட்டத்தை உருவாக்கி செல்படுத்த முயற்சிக்கும் அனைவருக்கும் ஒரே பொது சிவில் சட்ட முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆன்லைன் கூட்டத்தில், ஏஐஎம்பிஎல்பி தலைவர், சாய்ஃபுல்லா ரஹ்மானி, மவுலானாக்கள் கலீத் ரஷீத் ஃபராங்கி மஹலி, இஸ்லாமிக் சென்டர் ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் ஏஐஎம்பிஎல்பி, வழக்கறிஞர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் சட்ட ஆணையத்தின் முன் தங்களின் கருத்துக்களை மிகவும் வலிமையாக எடுத்துவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் சட்ட ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டன.

பொது சிவில் சட்டம் குறித்த பிரதமரின் வலியுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்த மவுலானாக்கள் கலீத் ரஷீத் ஃபராங்கி மஹலி,” பொது சிவில் சட்டத்தை அடிமுதல் நுனி வரை முழுவதுமாக ஏஐஎம்பிஎல்பி எதிர்க்கிறது. சட்ட ஆணையத்தின் முன்பு எங்களின் கருத்துக்களை தீவிரமாக முன்வைப்பதன் மூலம் அரசால் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தினை எதிர்ப்பதற்கான ஒரு உத்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதற்காக செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் எல்லா முஸ்லிம் அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் நேரத்துக்கு முன்பு பொது சிவில் சட்டம் குறித்து பேசுவதை அரசியல்வாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்போதும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இந்தப் பிரச்சினையைத் தொடங்கியுள்ளனர்.

பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கப்போவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அது பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள்,பார்சிகள் இன்னும்பிற சிறுபான்மையினரை பாதிக்கும். இந்தியாவில் ஒவ்வொரு 100 கிமீக்கும் மொழி மாறுபடுகிறது. இப்படியிருக்கையில் அனைத்து சமூகத்துக்கும் ஒரே மாதிரியான விதியை அமல்படுத்த முடியும். ஒவ்வொரு சமூகமும் வித்தியாசமான வழிபாட்டு முறை, சடங்குகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொருவரின் சொந்த நம்பிக்கைகளை சுதந்திரமாக கடைபிடிக்கும், வாழும் உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபாடி ரயில் நிலையத்தில் இருந்து 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 27) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர், போபாலில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவு மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் உடன் ஒத்துப் போகிறது. மக்களுக்கு இரண்டு விதமான விதிகள் இருந்தால் ஒரு குடும்பம் செயல்படுமா? பிறகு ஒரு நாடு எப்படி இயங்கும்? நமது அரசியலமைப்புச் சட்டமானது, அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது.

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். எந்தெந்த அரசியல் கட்சிகள் தங்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெறுகிறது என்பதை இந்திய முஸ்லீம் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். யுசிசி என்ற பெயரில் இப்படிப்பட்டவர்களைத் தூண்டி விடுவதற்கான வேலைகள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். உண்மையாகவே முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால், முஸ்லீம் சகோதரர்கள் ஏழைகளாகவோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களாகவோ இருக்க மாட்டார்கள். உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எதிர்கட்சிகள் வாக்கு வங்கிக்காக மட்டுமே இதனைப் பயன்படுத்துகிறது” என பேசினார்.

இதற்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அகில இந்திய மஜ்லீஸ்-இ-இடிஹதுல் முஸ்லீமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், “இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் பன்மைத்துவத்தை பிரதமர் பிரச்னையாகக் கருதிகிறார். ஒருவேளை அரசியலமைப்புச் சட்ட விதி 29ஐ பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். எனவேதான் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் பன்மைத்துவத்தை குலைக்கப் பார்க்கிறார்” என்றார்.

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வேணுகோபால், “மணிப்பூர் கலவரம், நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லா நிலை ஆகியவற்றைப் பற்றி பிரதமர் மிகவும் அரிதாக பேசுகிறார். எனவே, முதலில் நாட்டில் நிலவும் வறுமை, விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா நிலை குறித்து பிரதமர் பேசட்டும். மணிப்பூர் கலவரம் பற்றி அவர் ஒருபோதும் பேசியதில்லை” என தெரிவித்தார். மேலும், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய பிரமுகர்கள் கூறுகையில், “ஒபாமாவின் அறிவுரயை பிரதமர் மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்து பிரிவில்லா குடும்பத்திற்கு ஒரு முடிவு இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினர்.

Leave your comments here...