தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பதவியேற்பு: மடாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு..!
சைவத் திருமடங்களுள் ஒன்றாகவும், சைவமும் தமிழும் இனிதே தழைத்தோங்குக என்ற கோட்பாட்டுடன் சமய வளா்ச்சியிலும், தமிழ் வளா்ச்சியிலும் பெரும் பங்காற்றி வரும் ஆதீனமாக விளங்குகிறது தருமை ஆதீனம். தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் டிசம்பா் 3-ஆம் தேதி முக்தியடைந்ததை அடுத்து, ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தருமையாதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக இன்று வெள்ளிக்கிழமை ஞான பீடம் ஏற்றார்.
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்தின் 27 ஆவது பட்டமாக ஞானபீடத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பற்றிய வரலாறு:-
நீலகண்ட யாழ்பாணர் அவதரித்த கடலூர் மாவட்டம் எருக்கத்தம்புலியூரில் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அன்று சிவத்திரு. மறைஞான சம்பந்தம் பிள்ளை – அலர்மேல் மங்கை அம்மையார் தம்பதிகளுக்கு மூத்த மகனாய் அவதரித்தார்கள். பெரும்தவம் செய்த பெற்றோர்கள் இட்ட பெயர் வேல்முருகன்.
தன்னுடைய 23 ஆவது வயதில் துறவு ஏற்றார்கள். பரிபூரணமடைந்த 26 ஆவது குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசிரமம்,சமய,விசேட,நிர்வாண தீட்சைகள் பெற்றவர்கள்.
ஆதீன பணிகள்:- ஸ்ரீமத் மௌன குமாரசாமித் தம்பிரான் என்ற பெயர் கொண்டு 2000 ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலி மற்றும் காசித்திருமடங்களின் கட்டளை தம்பிரானாக செயல்பட்டார்கள். பிறகு திருவையாறு மற்றும் திருச்சி மலைகோட்டை மௌன மடம் ஆகியவற்றின் கட்டளை விசாரணையாக 2003 முதல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பொறுப்பு வகித்தார்கள்.
மேலும் திருச்சிராப்பள்ளி சைவசித்தாந்த சபை, திருச்சிராப்பள்ளி திருமுறை மன்றம், திருவையாறு ஐயாறப்பர் இறைபணி மன்றம், திருவையாறு ஐயாறப்பர் வாரவழிபாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்து அன்பர்களை வழிநடத்தினார்கள்.
கல்வியாளர்:- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற இலக்கியம் படிப்பில் எம்.ஏ.., பட்டம் பெற்றார்கள். “குமரகுருபரர் செந்தமிழ்திறன்” என்ற ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இவர்களுக்கு டாக்டர் பட்டம் ( பிஹெச்.டி) வழங்கியுள்ளது. காசிமடத்தின் தலைமை நிர்வாகியாக காறுபாறு பணியை மேற்கொண்டபோது திருப்பனந்தாள் கலைகல்லூரியின் பேராசிரியர் மற்றும் செயலாளராக 1988 முதல் 2000 வரை பணியாற்றினார்கள். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் பங்கேற்று கட்டுரைகளை படைத்துள்ளார்கள்.
எழுத்தாளர்:- பிள்ளைதமிழ்,கலம்பகம், ஒருபா ஒருபஃது இரண்டை குறம், குமரகுருபரர் பிரபந்தம், தாயுமானவ சுவாமிகள் முதலிய சமய நூல்கள், சிறுவெளியீடுகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்துள்ளார்கள்.
பத்திரிகை ஆசிரியர்:- 2000 ஆவது ஆண்டு வரை “குமர குருபரர்” இதழின் சிறப்பாசிரியர், 2006 முதல் தருமை ஆதீனத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையான “ஞானசம்பந்தம்” மாத இதழின் ஆசிரியராக உள்ளார்கள்.
சமயப்பணிகள்:-
சமயம், இலக்கியம், கல்வி உட்பட இதுவரை 5000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ள இளைய பண்டார சந்நிதி சுவாமிகள் வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொண்டவர்கள். இலங்கை, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மன், ஹாலந்து, தென் ஆப்பிரிக்கா, போலந்து, சுவீட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, குவைத், ஹாங்ஹாங், இந்தோனிசியா, சீசெல்ஸ், நேபாளம், மொரீசியஸ், சீனா முதலிய நாடுகளுக்கு சென்று சமய, சமுதாய, இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார்கள்.
சமுதாய பணிகள்:- நேரடியாக களத்தில் இறங்கி சமுதாயப் பணிகளை மேற்கொள்ளக் கூடியவர்கள். உதாரணமாக குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போதும், கார்கில் போரின் போதும் லட்சக் கணக்கில் நிதி வசூலித்து அனுப்பினார்கள். கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்கள்
தலயாத்திரைகள்:- 4 முறை கயிலை யாத்திரை, அமர்நாத் உள்ளிட்ட பாடல் பெற்ற 276 தலங்கள், வைப்புத் தலங்கள், சக்தி தலங்கள், விநாயகர் தலங்கள், திருப்புகழ் தலங்கள், நாயன்மார்கள் அவதார தலங்கள், 107 திவ்ய தேசங்கள், ஜோதிர்லிங்க தலங்கள், கிராம வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு யாத்திரை சென்றுள்ளார்கள்.
உலக மாநாடுகளில் பங்கேற்பு:- உலகம் முழுக்க நடந்த ஏராளமான மாநாடுகளில் இளைய பண்டார சந்நிதி சுவாமிகள் பங்கேற்றிருக்கிறார்கள்.
அவற்றில் முக்கியமான சில:
- 2 ஆவது உலக இந்து மாநாடு – இலங்கை
- 6,7,8 & 10 சைவ மாநாடு – இலண்டன்
- 8 ஆவது சித்தாந்த மாநாடு – மலேசியா
- 10 ஆவது சித்தாந்த மாநாடு – சுவீஸ்
- 2 ஆவது முருகன் மாநாடு – மலேசியா
- சென்னையில் 2018ம் ஆண்டு ஐந்தாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டை தலைமை ஏற்று சிறப்பாக நடத்தியது.
குடமுழுக்கு பணிகள்:- 500 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு முன்னின்று குடமுழுக்கு பணியை நடத்தியுள்ளார்கள்.
இந்த விழாவில் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள் மற்றும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்து இயக்க தலைவர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Leave your comments here...