சிகிச்சைக்கு வந்த போதை வாலிபர் – பெண் டாக்டர் குத்திக்கொலை..!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ் (23). இன்று அதிகாலையில் அவர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் கொண்டு வந்துள்ளனர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையின்போது சந்தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு டாக்டர் வந்தனா சிகிச்சை அளித்தபோது திடீரென ஆவேசமாக எழுந்த சந்தீப், ரகளையில் ஈடுபட்டுள்ளார். கத்தரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார். இதில் டாக்டர் வந்தனா, போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரின் மரணம் குறித்து பல்வேறு தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் போதையில் இருந்துள்ளார்.மருத்துவர் உயிரிழப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் தெரிவித்ததுடன், இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்திய மருத்துவ சங்கம், மற்றும் கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். ஊடக தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்லம் மாவட்ட காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.
Leave your comments here...