19 ஏக்கர் நிலப்பரப்பில், 23கோடி செலவில் மாமல்லபுரத்தில் சிற்பபூங்கா…!
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள். மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளது.
இதில் பல சிற்ப கூடங்கள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக கற்களை சாலை ஓரம் மற்றும் வீதிகளில் போட்டு அறுத்து வருகிறார்கள். இதனால் தூசு பறந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அவ்வழியே செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக்கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சர்வதேச விளையாட்டு போட்டிகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா பகுதியாக மாறி வருகிறது.
இதைத்தொடர்ந்து சிற்பக்கூடங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் பங்களிப்புடன் சிற்ப பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது. கைவினைத் தொழில் மேம்பாடு, சிற்பக்கூடங்கள் ஒழுங்குமுறை கருதி சிட்கோ நிறுவனம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் “சிட்கோ” சிற்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்து உள்ளது.
இது 19 ஏக்கர் நிலப்பரப்பில், 23கோடி செலவில் அமைய உள்ளது.இதற்கான முதல்கட்ட பணியாக நில அளவை தொடங்கி நடந்து வருகிறது. சிற்பபூங்கா அமைய உள்ளதால் மாமல்லபுரம் சிற்பக்கலை சிற்பிகள், ஸ்தபதிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Leave your comments here...