பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் – தங்க அங்கி அணிந்து முடிசூட்டி கொண்டார்..!
பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது மூத்த மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்றார். அரசர் சட்டத்தையும் இங்கிலாந்து திருச்சபையையும் நிலை நிறுத்துவேன் என்று அவர் உறுதிமொழி ஏற்றார். இதனைத்தொடர்ந்து தங்க அங்கி அணிவித்து அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மகுடம் சூட்டப்பட்டது. கையில் செங்கோலும் அளிக்கப்பட்டது.
𝐇𝐨𝐦𝐚𝐠𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐓𝐡𝐞 𝐏𝐫𝐢𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐖𝐚𝐥𝐞𝐬
The King receives ‘Homage’ (a promise of allegiance and faithfulness), from The Prince of Wales on behalf of The Royal Family. #Coronation pic.twitter.com/VRZJx7XZDd
— The Royal Family (@RoyalFamily) May 6, 2023
பிரிட்டனின் அரச அரியணையில் வயதான நிலையில் இருக்கும் ஒருவருக்கு மன்னர் மகுடம் சூட்டுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. நிகழ்வில் ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி (வேல்ஸ்) கேட் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மன்னரின் இளைய மகன் ஹாரி கலந்துகொண்டார். ஆனால், அவரது மனைவி மெக்கல் மார்க்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. விழாவில் 10-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடப்பட்டன. அதில் முதன்முதலாக வேல்ஸ் மொழி பாடலும் பாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து 2,000-க்கும் அதிகமான பிரபலங்களும், விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பின், அரியணை ஏறும் நபராகவும், காமன்வெல்த் தலைவராகவும் இளவரசர் சார்லஸ் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். ராணி 2-ம் எலிசபெத் மறைவால், சம்பிரதாயப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸை, மன்னர் 3-ம் சார்லஸாக லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அசெஷன் கவுன்சில் அறிவித்தது. இந்தநிலையில், தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக பிரிட்டனின் மன்னராகியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் – சார்லஸ் குழந்தைப் பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று பயின்றார். கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று வரலாற்று பாடத்தில் கடந்த 1970-ம் ஆண்டில் பட்டம் பெற்றார். பல்கலைக்குச் சென்று பட்டம் பெற்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில் சேர்ந்து பைலட்டாக 7 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராக பணியாற்றி 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
கடந்த 1981-ம் ஆண்டு டயானாவை சந்தித்து சார்லஸ் தனது காதலை வெளிப்படுத்தினார். இதை டயானா ஏற்றுக் கொண்டதால், இவர்களது திருமணம் 1981-ல் நடந்தது. முதல் குழந்தை இளவரசர் வில்லியம் 1982-ல் பிறந்தார். இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி 1984-ல் பிறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் சார்லஸ் – டயானா உறவில் விரிசல் ஏற்பட்டது. சார்லஸின் முன்னாள் காதலி கமீலாதான் இந்தப் பிரிவுக்கு காரணம் எனக் கூறப்பட்டது.
கடந்த 1992-ம் ஆண்டு இருவரும் பிரிந்து 1996-ல் விவாகரத்து பெற்றனர். அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் காதலி கமீலாவை, இளவரசர் சார்லஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
Leave your comments here...