பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி – தமிழக பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் பாராட்டு..!
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அவர் இந்தியில் உரையாற்றியது 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பானது.
மனதின் குரலின் வரலாற்று சிறப்புமிக்க 100-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி கோடிக்கணக்கான இந்தியர்களின் மன் கி பாத் பிரதிபலிப்பாகும். இது அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும். இந்த நிகழ்ச்சி நேர்மையான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான மிகச் சிறந்த வழித்தடமாக இருந்துள்ளது. நிகழ்ச்சி குறித்த நாட்டு மக்களின் கடிதங்களை படித்து பார்த்தேன். எனக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது.
மனதின் குரல் நிகழ்ச்சி மக்களின் நல்ல செயல்களை கொண்டாட கூடிய இடமாக இருக்கிறது. சாமானிய மக்களுடன் இணைவதற்காக ஒரு வழியை இந்த நிகழ்ச்சி எனக்கு அளித்தது. ஒவ்வொரு முறை பேசும் போதும் நாட்டு மக்களிடம் இருந்து விலகாமல் உடன் இருப்பது போல் எண்ணம் வரும். 100-வது நிகழ்ச்சியை எட்டியதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி, நான் என்ற எண்ணத்தில் இருந்து நாம் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு ஆன்மீக பயணமாகும். மக்களுடன் தொடர்பு கொள்ள என்னை அனுமதித்தது. தூய்மை இந்தியா உள்ளிட்ட மன் கி பாத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மக்கள் இயக்கங்களாக மாறியது.
மாதாந்திர வானொலி ஒலிபரப்பு மற்றவர்களிடம் இருந்து கற்கும் முக்கிய ஊடகமாக மாறியுள்ளது. நான் உங்களிடம் இருந்து ஒரு போதும் துண்டிக்கப்படவில்லை. இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனித தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பது வளர்ந்து வரும் சுற்றுலா துறைக்கு மிகவும் உதவும்.
வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு முன்னர் நம் நாட்டில் உள்ள 15 இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். சுத்தமான சியாச்சின், பிளாஸ்டிக் மற்றும் இ கழிவுகள் ஆகியவற்றை பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். மரம் நடுவது, நீர் நிலைகளை சுத்தம் செய்வது, குழந்தைகளின் கல்வி என பல விஷயங்கள் குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன். இவ்வாறு மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார்.அதில் பிரதமர் மோடி கூறியதாவது தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா குவளைகளை ஏற்றுமதி செய்தனர். தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக நதிக்கு புத்துயிர் அளித்தனர். பல பரப்புரைகள் பெண்களால் வழிநடத்தப்பட்டு முயற்சிகளை முன்னுக்கு கொண்டு வர இந்த நிகழ்ச்சி சிறந்த தளமாக உள்ளது.
நாட்டின் பெண் சக்தியின் நூற்றுக்கணக்கான எழுச்சியூட்டும் கதைகளை மனதின் குரலில் குறிப்பிட்டு இருப்பது எனக்கு நிறைவான விஷயமாகும். நமது ராணுவமாக இருந்தாலும் சரி, விளையாட்டு உலகமாக இருந்தாலும் சரி பெண்களின் சாதனைகளை பற்றி நான் பேசும்போது அது அதிகமாக பாராட்டப்பட்டது. இவ்வாறு மோடி பேசினார்.
Leave your comments here...