முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்..!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள ஓட்டலில் அவர் இரவு தங்குகிறார். நாளை டெல்லியில் சில கட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், நாளை ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என தெரிய வந்துள்ளது. அவர்கள் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை தடைசெய்ய வேண்டும் என்று விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து சுமூக நிலை இல்லாமல் உள்ளது. தமிழக அரசு அனுப்பி உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்யவேண்டும் என சமீபத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை பல்வேறு மாநில எதிர்க்கட்சிகள் தலைவர்களின் வரவேற்றனர். இதுதொடர்பாகவும் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதியை தமிழகத்துக்கு வருமாறு நேரில் அழைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று இருப்பதாகவும் தலைமை செயலக வட்டாரத்தில் பேசப்பட்டது. வரும் ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. அன்றைய தினம் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மான பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.
அதுபோல மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள நூலகமும் திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனைக்கும், நூலகத்துக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவற்றை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைப்பார் என்று கூறப்படுகிறது. ஜனாதிபதியை சந்தித்து நாளை இரவே முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.
Leave your comments here...