5 முறை முதல்வர் – பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு..!
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள மாலூட் பகுதியின் அபுல் குரானாவில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிரகாஷ் சிங் பிறந்தார். இவர் லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற நிலையில் 1947 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதற்கு முன்பு பிரகாஷ் சிங் பாதல் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இதனைத் தொடர்ந்து சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து 1957 ஆம் ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர், சமூக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
அதேசமயம் 1970 ஆண்டு தனது 43வது வயதில் பஞ்சாப் மாநில முதலமைச்சரானார். அதன்மூலம் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பதவி வகித்த இளம் வயதுடையவர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 1970-1971, 1977-1980, 1997 -2002, 2007 -2012, 2012 -2017 என மொத்தம் 5 முறை பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராக இருந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு அகாலிதளம் தலைவராக ஆன பிறகு அவர் 3 முறை முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்ததால் கட்சியை மகன் சுக்பீர் சிங் பாதலிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து 1972, 1980 மற்றும் 2002 இல் எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரகாஷ் சிங் பாதல் இருந்தார். அவர் லாம்பி சட்டமன்றத் தொகுதியில் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். பிரகாஷ் சிங் பாதல் 1977 ஆம் ஆண்டு மத்தியில் இருந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு வாபஸ் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சித்த பிரகாஷ் சிங் 2020 ஆம் ஆண்டு 2015 ஆம் ஆண்டில் தனக்கு அளிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷண் விருதை திருப்பிக் கொடுத்தார். கடைசியாக கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் லாம்பி தொகுதியில் போட்டியிட்ட அவர் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குர்மீத் சிங்கிடம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தனது அரசியல் வாழ்க்கையில் பிரகாஷ் சிங் பாதல் 13 மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு 11 முறை வெற்றி பெற்றார். குறிப்பாக 1969 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த பத்து தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.
இதனிடையே 95 வயதான பிரகாஷ் சிங் பாதலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் சிங் பாதல் இரவு 8 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரகாஷ் சிங் பாதலின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மற்றும் நமது தேசத்திற்கு பெரிதும் பங்களித்த ஒரு குறிப்பிடத்தக்க அரசியல்வாதி ஆவார். அவர் பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்ததோடு மட்டுமல்லாமல் நெருக்கடியான காலங்களில் சிறப்பாக செயல்பட்டார்.
Extremely saddened by the passing away of Shri Parkash Singh Badal Ji. He was a colossal figure of Indian politics, and a remarkable statesman who contributed greatly to our nation. He worked tirelessly for the progress of Punjab and anchored the state through critical times. pic.twitter.com/scx2K7KMCq
— Narendra Modi (@narendramodi) April 25, 2023
பிரகாஷ் சிங் பாதலின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு. நான் பல ஆண்டுகளாக அவருடன் நெருங்கி பழகியுள்ளேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எங்களின் பல உரையாடல்களை நான் நினைவுகூர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Leave your comments here...