மணல் கடத்தலுக்கு இடையூறு – கிராம நிர்வாக அலுவலர் பட்டபகலில் கொடூரமாக வெட்டிக் கொலை..! திமுக ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு?

தமிழகம்

மணல் கடத்தலுக்கு இடையூறு – கிராம நிர்வாக அலுவலர் பட்டபகலில் கொடூரமாக வெட்டிக் கொலை..! திமுக ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு?

மணல்  கடத்தலுக்கு இடையூறு  –  கிராம நிர்வாக அலுவலர் பட்டபகலில் கொடூரமாக வெட்டிக் கொலை..! திமுக ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு?

தூத்துக்குடி அருகே மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி நேரில் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த யேசுவடியான் மகன் லூர்து பிரான்சிஸ் (53). இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்று மதியம் 12.30 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த 2 நபர்கள், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்த நிலையில் 2 நபர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பிற்பகல் 2.40 மணியளவில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று லூர்து பிரான்சிஸ் உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர். லூர்து பிரான்சிஸ் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறியது: “கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் துணிச்சலும், நேர்மையும் கொண்ட அரசு அலுவலர். இதற்கு முன்பு அவர் ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அங்கு அருங்காட்சியம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை கண்டறிந்து துணிச்சலாக அவைகளை அகற்றி இடத்தை மீட்டு கொடுத்துள்ளார். அப்போதும் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றார்கள். இது தொடர்பாக காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்து அந்த நபர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தோம்.

அத்தகைய நேர்மையான அலுவலர் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மணல் திருட்டு தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் ஆட்சியர்.

நடந்தது என்ன? – முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் காவல் துறையினரிடம் தொடர்ந்து வாய்மொழியாக புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு மற்றும் சிலர் தாமிரபரணி ஆற்றில் மணல் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி எழுத்துபூர்வமாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராமசுப்பு மற்றும் அவரது உறவினரான மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்பது காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு (45) என்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மாரிமுத்துவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முறப்பநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸ் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது.

இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியிருந்த போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது.

இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையா விமர்சித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிசை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி இவ்வரசை சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன், அதற்கு இவ்வரசு பாராமுகமாய் இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலை மட்டுமே கவனம் செலுத்தும் இந்த விடியா அரசின் முதல்வர் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திட்டவட்டமாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...