அண்ணாமலை புகார் எதிரொலி – ஜி-ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை..!
ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை, திருச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்று வருதாக தெரிகிறது.
குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுகவின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தப் பின்னணியில் ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்கள், அந்நிறுவன நிர்வாகிகளின் இடங்களில் அதிகாலை தொடங்கி வருமான வரித் துறையினரின் சோதனை தீவிரமாக நடந்து வருவது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, தங்கள் நிறுவனம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகளால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட தமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தங்களது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.38,000 கோடி என அண்ணாமலை வெளியிட்ட தகவல் தவறு என்றும், தங்களது கட்டுமானத் திட்டங்கள் பலவும் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜி-ஸ்கொயர் தெரிவித்துள்ளது.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் ஒரு பெண் அதிகாரி உட்பட நான்கு வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை – பீலமேடு, அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் சுமார் 10 ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். மஹேந்திரா பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஹேந்திரா ராமதாஸின் கோவை – புலியக்குளம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
Leave your comments here...