பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து – மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
சென்னை பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் பழமையான 4 மாடி கட்டிடம் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிகள் இன்று காலை நடைபெற்று வந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது ‘டமார்’ என்று வெடிச்சத்தம் போன்று பயங்கர சத்தம் கேட்டது. கடுமையான புகை மூட்டமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு ஓடி வந்தனர். கட்டிடத்தின் இடிபாடுகள் மலை போல குவிந்து கிடந்தன. கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் 50 பேர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். பெரிய பெரிய துண்டுகளாக கிடந்த கட்டிட இடிபாடுகளை மிஷின் மூலமாக உடைத்து எடுத்தனர்.
பின்னர், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்கும் நோக்கில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் விரைகின்றனர். குறுகிய பகுதி என்பதால் மீட்புப்பணியில் சிரமம் உள்ளது. அனுமதி பெறாமல் சீரமைப்புப்பணி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...