சூடானில் ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் – இந்தியர் உட்பட 56 பேர் பலி.!
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையிலான மோதல் காரணமாக, பொதுமக்கள் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தியர் ஒருவர் தோட்டா பாய்ந்ததில் உயிரிழந்துள்ளார் என இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப்., எனப்படும் விரைவு உதவிப் படையினர், தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள், தலைநகர் கர்த்துாமில் உள்ள விமான நிலையத்தை, தங்கள் வசமாக்கியுள்ளனர். மெரோ பகுதியில் உள்ள விமான நிலையமும், துணை ராணுவப் படையினர் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே பல இடங்களில் துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கிடையே சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.மோதல் காரணமாக, பல அடுக்குமாடி கட்டடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. மேலும் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. சூடானில் உள்ள மக்கள் பெரும் பொருள் சேதத்தை சந்தித்துள்ளனர்.
Leave your comments here...