700 ஆண்டுகள் பழமையான வீரபத்திரர் சிலை கண்டுபிடிப்பு..!
கிருஷ்ணகிரி: தளி அருகே 700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கால வீரபத்திரர் சிலை கண்டறியப்பட்டு உள்ளது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியவை இணைந்து தளி அருகே கும்ளாபுரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அழிந்த நிலையில் பல கோவில்கள் காணப்பட்டன.
அதில் 3 கோவில்கள் வீரபத்திரர் கோவில்களாகும். அதில் ஒன்று ஜங்கில் வீரபத்திரர் கோவில். அந்த கோவில் இடிக்கப்பட்டு தற்போது புதியதாக கட்டப்பட்டுள்ளது. இடித்து அகற்றப்பட்ட கற்களுக்கிடையே 1½ அடி உயர வீரபத்திரர் சிலை காணப்பட்டது.
இந்த சிலை குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:- ஒய்சாளர் காலத்து பல கோவில்கள் ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் காணப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் ஒய்சாளர் கலைபாணியில் கட்டப்படவில்லை. மாறாக பிற்கால சோழர் கலை பாணியிலேயே கட்டப்பட்டுள்ளன. சில சிற்பங்களில் மட்டும் ஒய்சாளரின் கலை தாக்கம் தென்படும். கர்நாடகாவில் உள்ள ஒய்சாளர் கோவில்களும், சிற்பங்களும் மாக்கல்லால் உருவாக்கப்பட்டிருக்கும். பேலூர், ஹலபேடு, சோமநாதபுரம் ஆகியவை ஒய்சாளர் கலையின் உச்சங்களாகும். இவை யாவும் மாக்கல்லால் ஆனவையே ஆகும்.
700 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சாளர் கால வீரபத்திரர் சிலை:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒய்சாளர் ஆட்சியின் அடையாளங்களாக பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவர்களது மாக்கல்லால் ஆன சிலைகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் தான் ஒய்சாளரின் மாக்கல்லால் ஆன வீரபத்திரர் சிலை கும்ளாபுரத்தில் கண்டறியப்பட்டு தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை பல ஆண்டுகளாக பூமியில் புதையுண்டு கிடந்ததால் தேய்ந்து காணப்படுகிறது.
ஆனாலும் மாக்கல்லில் செய்யப்பட்டுள்ள சிலை தடித்த ஆடை அணிகலன்கள், பீட அமைப்பு மற்றும் தேவியை வலப்புறம் காட்டியிருப்பது ஆகியவற்றை கொண்டு சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒய்சாளர் கலை சிலை என்பதை உறுதிப்படுத்தமுடிகிறது. இவர் தனது வலக்கையில் கத்தியையும், இடது கையை பீடத்தின் மீதும், ஊன்றியுள்ள கேடயத்தின் மீதும் வைத்துள்ளார். வலது இடது பின் கரங்களில் முறையே அம்பு மற்றும் வில்லினை வைத்துள்ளார். இவருக்கு வலப்புறம் சிறிய உருவமாக வணங்கும் நிலையில் ஆட்டுத்தலையுடன் கூடிய தட்சனின் உருவமும், இடப்புறம் வீரபத்திரரை போன்றே கைகளில் கத்தி கேடயத்தோடு நிற்கும் தேவியின் உருவமும் காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழகத்து வீரபத்திரர் சிலைகளில் தேவியின் உருவம் காட்டப்படுவதில்லை. இந்த ஒரு ஒய்சாளர் சிலை மட்டும் கும்ளாபுரத்தில் காணப்பட்டது. அப்பகுதியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு பணியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செலவன், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், ஊராட்சி தலைவர் சிக்கண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
Leave your comments here...