ரயிலில் பயணிகளுக்கு தீவைத்த ஷாருக் சைபி உ.பி.யில் அதிரடி கைது
கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் இடையே எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணி அளவில் கோழிக்கோடு அருகே எலத்தூர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டது.
அப்போது டி2 பெட்டியில் இருந்து டி1 பெட்டிக்கு சிவப்பு சட்டை, தொப்பி அணிந்தவாறு ஆசாமி ஒருவர் வந்தார். கையில் 2 பிளாஸ்டிக் பாட்டில்களையும் வைத்து இருந்தார். திடீரென மர்ம ஆசாமி கையில் இருந்த பாட்டில்களை திறந்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் மீது ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. சுதாரித்துக் கொண்ட மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் உயிர் தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த இரண்டரை வயது குழந்தை உள்பட 3 பேர் பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கேரளா ரயில் தீ விபத்தில் சந்தேகிக்கும் நபர் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக புலனாய்வு குழு அதிகாரிகள் நொய்டா விரைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு விரைந்தனர்.
கேரள புலனாய்வுக் குழு நொய்டா சென்றிருந்த நிலையில் ஷாருக் சைபி உத்திரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர். அவர், உத்திரபிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave your comments here...