பங்குனி உத்திர திருவிழா – பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு 5 நாட்கள் நிறுத்தம்..!
- April 1, 2023
- jananesan
- : 347
பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டளை தரிசனம், முடிக்காணிக்கை, தங்கரத புறப்பாடு, தங்கத்தொட்டில் உள்ளிட்டவற்றில் பணம் செலுத்தி கலந்துகொள்கின்றனர். இதில் தங்கரத புறப்பாடு மிகவும் சிறப்பு பெற்றது.
பழனி மலைக்கோவிலில் தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் செலுத்தி பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுகின்றனர். இந்தநிலையில் பழனியில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்களின்போது தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி வரை என 5 நாட்கள் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதேவேளையில் நாளை ஒருநாள் மட்டும் கோவில் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...