முதல் முறையாக தனியார் பஸ்சில் இளம்பெண் ஓட்டுநராக நியமனம் – இணையத்தில் வைரலாகும் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா..!
கோவை : சோமனூர்- காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் முதல் முறையாக இளம்பெண் ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடவள்ளியை சேர்ந்த டிப்ளமோ பார்மஸி படித்துள்ள ஷர்மிளா என்ற இளம்பெண் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று கோவை நகரின் சாலைகளில் திறம்பட தனியார் பஸ்சை இயக்குகிறார். கனரக வாகன லைசென்ஸ் பெற்று இருந்தபோதும் பஸ் இயக்க வழித்தடம் கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷர்மிளா தெரிவித்தார். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
இது குறித்து பெண் ஓட்டுனர் ஷர்மிளா கூறுகையில், “எனது தந்தை மகேஷ், கோவையில் ஆட்டோ ஓட்டுநர். அவர் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். அவர் ஓட்டும் சமையல் காஸ் சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்து பழகினேன். பஸ் ஓட்டுநராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதனால், கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றேன்.ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையை பதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஏழாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. இப்போதுதான் பஸ்சை பேருந்தை கையில் எடுத்திருக்கிறேன். ஆனால், 2019ம் ஆண்டு முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்தேன். அதன்பின், பஸ் ஓட்ட பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன்’’ என்றார்.
பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவி பிரியா என்பவர் கூறுகையில், “வழக்கமாக ஆண்கள் மட்டுமே பஸ் இயக்குவதை பார்த்துள்ளேன். தற்போது, முதல் முறையாக இளம்பெண் ஓட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது. அதே வேளையில், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஷர்மிளா திகழ்கிறார். மேலும், ஆண் ஓட்டுனர்களிடம் பேச தயக்கம் இருக்கும். ஆனால், பெண் ஓட்டுனரிடம் எளிதில் அணுகி தங்களுடைய நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
Leave your comments here...