புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்..!
புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். அப்போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனி நபர் தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் கொண்டு வந்தனர். 5 பேரின் தனி நபர் தீர்மானங்களையும் இணைத்து விவாதிக்க சபாநாயாகர் ஏம்பலம் செல்வம் அனுமதியளித்தார். எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மத்திய அரசு நிதி பற்றாக்குறை, அதிகாரிகள் அலட்சியம், கவர்னர் அரசை நிலைக்குலைய செய்தல் ஆகியவை பற்றி சபையில் பேசப்பட்டது.
36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. கடந்த 63-ம் ஆண்டில் 39 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். பின்பு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பின்னர் அதிகாரம் குறைக்கப்பட்டு, மத்திய அரசின் கண்காணிப்பில் வந்தது. சமூகம், நிதி, நிர்வாக ரீதியாக அதிகாரம் குறைந்துள்ளது. இதனால் மாநில அந்தஸ்து குரல் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல் தலைமைச்செயலர், கவர்னர் முடிவு எடுக்க வேண்டிய நிலையுள்ளது.
மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது. பிற்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு கூட மத்திய அரசை நாட வேண்டியுள்ளது. பெரும்பாலான கோப்புகள் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால் அதிகாரம் குறைந்துள்ளது. கவர்னரேதான் முடிவு எடுக்கிறார். முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கவர்னர், தலைமை செயலர், செயலர்கள் புதுவையின் மீது நிரந்தர அக்கறையின்றி செயல்படுகிறார்கள். பட்ஜெட்டுக்கு கூட மத்திய அரசுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. இது ஜனநாயக முறைக்கு எதிரானது. நியாய பங்கீடு மறுக்கப்படுகிறது. பட்ஜெட்டில் உதவி என்று தரப்படுவது நியாயமற்றதாக உள்ளது.
தமிழகத்தில் 69 சத இடஒதுக்கீடு தரப்படுகிறது. புதுவையில் இல்லை. இந்த தடையெல்லாம் நீங்க முழு தகுதியுடைய மாநில அந்தஸ்து தேவை. மத்தியில் பா.ஜனதா-காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. நாஜிம் (திமுக): புதுவைக்கு தற்போது மாநில அந்தஸ்து கிடைக்க அனைத்து வாய்ப்பும் உண்டு. மாநில அந்தஸ்துக்காக தொடங்கிய கட்சியின் ஆட்சி நடக்கிறது. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். கூட்டணி அறுவடை செய்யும் நேரம் இது. மத்திய பாஜக உதவியாக இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவர் சுஷ்மா சுவராஜ் புதுவை வந்தபோது மாநில அந்தஸ்தை பரிந்துரை செய்தார்.
நேரு (சுயேட்சை): பலமுறை தீர்மானம் நிறைவேவற்றியும் மாநில அந்தஸ்து கிடைக்காதது வருத்தம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பொதுநல அமைப்புகள், தொழிலாளர், இளைஞர்கள் கோஷம் எழுப்புகின்றனர். அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முழு நேர பணியாக அடுத்தக் கட்டத்துக்கு இதை கொண்டு செல்ல வேண்டும். குட்டி பிரான்சான புதுவைக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. புதிய திட்டங்களுக்கான ஆய்வு கூடங்களாகி விட்டன. ரேஷன் கடை இல்லாத மாநிலமாகி விட்டது. மத்திய அரசு திட்டங்களை திணிக்கின்றன. 78 நாடுகள் பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ளன. அவை சுதந்திரமாக உள்ளது. நாம் அடிமைப்பட்ட மாநிலமாக உள்ளோம். எனவே மாநில அரசுக்கு அதிகாரம் தேவை. அதற்கு மாநில அந்தஸ்து தேவை.
அனிபால் கென்னடி (திமுக): சட்டப்பேரவை இல்லாத லடாக்கை நிதி கமிஷனில் சேர்த்துள்ளனர். ஆனால் புதுவையை சேர்க்கவில்லை. சொந்த வருவாயில் 63 சதவீதத்தில் உள்ளோம். வடகிழக்கு மாநிலங்களை விட நம் வருவாய் அதிகம். வருவாய் குறைவான பல மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுள்ளன. அதிகாரமில்லாத சுதந்திரம் இருக்கிறது. உடனடியாக அனைத்துக்கட்சித்தலைவர்கள், சட்டப்பேரவை எம்எல்ஏக்களைக் கூட்டி, பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்த வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்.
செந்தில்குமார் (தி.மு.க.): ஆட்சியாளர்களை தாண்டி மக்களுக்கு உரிமை வேண்டும். இரண்டாம் தர குடிமக்களாக நாம் வாழும் சூழல் உள்ளது. இந்த இழுக்கை போக்கி உரிமையுடன் கூடிய குடிமகனாக வாழவேண்டும். சுதந்திரத்துக்காக பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர். இது அனைவரும் போராடி பெற்ற சுதந்திரம். இந்தியாவுடன் நாம் இணைந்தோம். நம்மால் சொந்த காலில் நிற்க முடியும். சட்டத்திட்டங்கள் அனைத்தும் கட்டி வைக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர். இவ்வளவு பிரச்சினைகளை வைத்தும் கட்டுகள் தேவையா? எனவே இந்த கட்டுகளில் இருந்து விடுபட மாநில அந்தஸ்து தேவை.
இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானத்தை வரவேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், வெங்க டேசன், ரிச்சர்டு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாக.தியாகராஜன், என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ், திருமுருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் பேசினர். மாகி, ஏனாமை இணைத்து மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். ஒட்டுமொத்தமாக மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி விளக்கமாக பேசியுள்ளனர். பல விஷயங்களை சொல்லியுள்ளனர். நிர்வாக சிரமம் இங்கிருந்தால் தான் தெரியும். ஆளும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும். உரிமையும் நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே வழி. பலமுறை இதை சட்டசபையில் வலியுறுத்தி உள்ளோம். நாம் வலியுறுத்தி செல்லும்போது மத்திய அரசு பார்ப்போம் என்கின்றனர். இந்த சட்டசபையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அவ்வளவு வலி உள்ளது. எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது. அனைத்தும் நல்லபடியாக நடக்கும், அதற்கான நேரம் வந்துள்ளது. மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. நமது கோரிக்கையை ஏற்று மாநில அந்தஸ்து கொடுக்கும் நிலையிலும் இருக்கிறது. எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு சென்று மத்திய அரசை வலியுறுத்தி வெற்றியை பெறுவோம். எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசே தீர்மானமாக ஏற்றதால், உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து 5 உறுப்பினர்களும் தங்களின் தனி நபர் தீர்மானத்தை திரும்பப்பெறுவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது வெளிநடப்பு செய்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு சபைக்கு திரும்பியிருந்தார். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி ஆரவாரம் செய்து தீர்மானத்தை வரவேற்றனர்.
Leave your comments here...