தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளா? உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!
திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்துவிட்டு இப்போது தகுதிவாய்ந்த பெண்களுக்கு என்று கூறுவது ஏற்புடையது அல்ல” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க அனுமதி கோரினோம். அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் நாங்கள் வெளியேறினோம். நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளில் அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரிட்துள்ளது.
திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது உண்மையில் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்தபோதும் வருவாய் பற்றாக்குறை வெறும் ரூ30 ஆயிரம் கோடி மட்டுமே குறைந்துள்ளது. மேலும் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு ஆகிவிட்டது. கேட்டால் உதயநிதி ஸ்டாலின் ’நீட் ரகசியம் சட்டப்போராட்டம் நடத்துவது’ என்று சொல்கிறார். நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தவில்லையா? இந்த ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
அதேபோல் திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை” என்றார்.
முன்னதாக இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தகுதிவாயந்த் குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால், பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். சிறப்புமிக்க இந்த திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ம் நாள் முதல் இத்திட்டம் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
Leave your comments here...