பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு – மகளிர் தினவிழாவில் விருதுகள் வழங்கி முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு…!
சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சிறப்புரையற்றினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எலெக்ட்ரிக் ரெயில் முதல் பெண் ஓட்டுனர் திலகவதி, டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, தீயணைப்புத்துறை அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், மீனாட்சி விஜயகுமார், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ரசீதா பேகம், இசைத்துறையில் சாதனை படைத்த மாற்று திறனாளி ஜோதிகலை ஆகியோர் சேர்ந்து பூங்கொத்து வழங்கினர். பின்னர் இவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு விருதுகளையும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றவர்கள் விவரம்,அவ்வையார் விருது நீலகிரி கமலம் சின்ன சாமிக்கும் வழங்கப்பட்டது. இலக்கியம் சமூக பணியில் சிறந்து பணியாற்றி தொண்டாற்றி வரும் இவருக்கு 90 வயதாகிறது. 43 நூல்கள் எழுதி உள்ள முனைவர் கமலம் சின்னசாமி பெண்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வாதாரத்தை வலுவாக்க பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார்.இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து அவ்வையார் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ், 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
சேலம் இளம்பிறைக்கு பெண் குழந்தை விருது கிடைத்தது. இவர் சேலம் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். அறிவியல் ஆர்வம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி பழுதானால் அதை சரி செய்ய புது கருவி கண்டுபிடித்ததற்காக இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கான விருது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல் பரிசாக கிடைத்தது.பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் நலன் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்தியதற்காக கிடைத்த இந்த விருதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக்கொண்டார்.
நாகப்பட்டின மாவட்ட நிர்வாகம் 2-ம் பரிசையும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் 3-ம் பரிசையும் பெற்றது. இதை அந்தந்த கலெக்டர்கள் பெற்றுக்கொண்டனர்.கருணை அடிப்படையிலான பணி ஆணைகள் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலெட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விருது மற்றும் பணி ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
விழா நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார் அவர் கூறியதாவது , உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். மகளிர் தினம் மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள். மகளிரை வாழ்த்துவதன் மூலம் இந்த நாட்டை வாழ்த்துகிறோம்.
மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். முடக்கப்பட்ட பெண்களை மீட்க தொடங்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம் . பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள் தான். இலவச பேருந்து சலுகை என்பது மகளிருக்கான உரிமை. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்தார்.
Leave your comments here...