கோடை வெப்பமான வானிலையை சமாளிப்பது எப்படி? முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு..!
இந்த ஆண்டு கோடையில் வெப்பமான வானிலையை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இந்த ஆண்டும் கோடையில் அதிகமான வெப்பம் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கோடையில் அதிகப்படியான வெப்ப வானிலையை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அடுத்த சில மாதங்களுக்கான வானிலை முன்னறிவிப்புகள், பருவமழை சாத்தியக்கூறுகள், ராபி பயிர்களில் வெயின் தாக்கம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
இதைக் கேட்ட பிரதமர் மோடி, தானியங்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். வானிலை கணிப்புகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் முன்னறிவிப்புகளை தயாரிக்குமாறும் உத்தரவிட்ட மோடி, அனைத்து மருத்துவமனைகளிலும் விரிவான தீயணைப்பு ஏற்பாடுகளின் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.
Leave your comments here...