இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது – பிரதமர் மோடியை சந்தித்த பில் கேட்ஸ் பாராட்டு
சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது பில் கேட்ஸ் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கொரோனா(கோ-வின்) இணையதளம், ஆதார் அடையாள அட்டை, கதி சக்சி முதலிய திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்து வரும் பில் கேட்ஸ், புது தில்லியில் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இது குறித்து பில்கேட்ஸ் தனது கேட்ஸ் நோட்ஸ் இணையதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:“இந்த வாரம் நான் இந்தியாவில் இருந்தேன், இங்கு சுகாதாரம், பருவநிலை மாற்றம், பிற முக்கியமான பகுதிகளில் நடக்கும் புதுமையான பணிகளைப் பற்றி அறிந்துகொண்டேன். உலகம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா போன்ற ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான நாட்டைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.’’
Delighted to meet @BillGates and have extensive discussions on key issues. His humility and passion to create a better as well as more sustainable planet are clearly visible. https://t.co/SYfOZpKwx8 pic.twitter.com/PsoDpx3vRG
— Narendra Modi (@narendramodi) March 4, 2023
எனது பயணத்தின் முக்கிய அம்சம் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பு என தெரிவித்துள்ள பில் கேட்ஸ், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சமத்துவமின்மையைக் குறைக்க அறிவியலும் புத்தாக்க முயற்சிகளும் எவ்வாறு பயனிளிக்கும் என்பது குறித்து பேசினோம். கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவது, இந்தியாவின் சுகாதார அமைப்புகளில் முதலீடு செய்வது குறித்து பேசினோம். கேட்ஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் பல பாதுகாப்பான, பயனுள்ள, மலிவு விலையில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா அற்புதமான திறனைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தொற்றுநோய்களின் போது கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதுடன் உலகம் முழுவதும் உள்ள பிற நோய்களைத் தடுக்கின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளார். தொற்றுநோயை இந்தியா கையாளும் முறை பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், “புதிய உயிர்காக்கும் கருவிகளை தயாரிப்பதோடு, இந்தியாவும் அவற்றை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது – அதன் பொது சுகாதார அமைப்பு 2.2 பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அவர்கள் கோவின் எனப்படும் இணையதளம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் திட்டமிட மக்களுக்கு உதவி உள்ளது. அதன் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை ஆதரிக்க இந்தத் தளம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது. கோ-வின் இணையதளம் உலகிற்கு ஒரு முன்மாதிரி என்று பிரதமர் மோடி நம்புகிறார், நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் முன்னேற்றத்தை பாராட்டிய பில் கேட்ஸ், “தொற்றுநோய் பரவலின் போது 200 மில்லியன் பெண்கள் உட்பட 300 மில்லியன் மக்களுக்கு அவசர டிஜிட்டல் கட்டணங்களை இந்தியா வழங்கியுள்ளது.
ஆதார் எனப்படும் டிஜிட்டல் ஐடி மூலம் புதுமையான தளங்களை உருவாக்கி, இந்தியா முன்னுரிமை அளித்துள்ளதால் மட்டுமே இது சாத்தியமானது. ” என்று அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் கதி சக்தி பெருந்திட்டம், ஜி20 தலைமைப் பொறுப்பு , கல்வி, புதிய கண்டுபிடிப்பு, நோய்களை எதிர்த்து போராடுதல் போன்ற இந்தியாவின் சாதனைகள் குறித்தும் கேட்ஸ் விளக்கியுள்ளார்.
“பிரதமர் உடனான எனது பேச்சுவார்த்தை, சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன்னெப்போதையும் விட எனக்கு நம்பிக்கையை அளித்தது. நாம் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தால் என்ன சாத்தியம் என்பதை இந்தியா வெளிப்படுத்துகிறது.இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடருவதுடன் அதன் கண்டுபிடிப்புகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்று கேட்ஸ் கூறியுள்ளார்.
Leave your comments here...