மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. 75 நாட்களில் திட்ட அறிக்கை தயாராகும்.!
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, 75 நாட்களில் தயாரிக்கப்படும்’ என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில், தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதற்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில் கிடைத்த வரவேற்பை அடுத்து, மதுரையிலும், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுஉள்ளது.அதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அடுத்ததாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி அரசு கேட்டு உள்ளது.விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.நிறுவனம் இறுதி செய்யப்பட்ட பின், 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மதுரையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 18 ரயில் நிலையங்களுடன், 31 கி.மீ., துாரத்திற்கு அமைய உள்ளது.
இது, திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டமாகும்.ரயில் நிலையங்களின் வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விபரங்கள் உள்ளிட்டவை குறித்த முழு விபரங்கள், விரிவான திட்ட அறிக்கையில் இடம் பெறும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Leave your comments here...