இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது : பில் கேட்ஸ்
இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிப்பதோடு, மிகப்பெரிய சவால்களை திறம்பட கையாள முடியுமென நிரூபித்து வருகிறது” என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று முடிவுக்கு வந்த பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக பில்கேட்ஸ் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார். தனது இந்திய பயணத்தின் போது, கேட்ஸ் அறக்கட்டளை பணிகள், இளம் தொழில்முனைவோர் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், ‘இந்தியாவுக்கு எனது செய்தி’ என்ற தலைப்பில், பில்கேட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை பதிவில் கூறியிருப்பதாவது:-”இந்த நேரத்தில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க நான் காத்திருக்க மிகவும் ஆவலுடன் உள்ளேன். உலகம் முழுவதும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவ வேண்டுமென்பதே எனது இலக்கு. பருவநிலை மாற்ற பிரச்னையும், உலக சுகாதாரமும் ஒன்றுடன் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையது.
உலக வெப்பமயமாதல் அதிகரிப்பு, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் தொற்று நோய்களின் பரவலை அதிகரிப்பதன் மூலம் வறுமை குறைப்பை மேலும் கடினமாக்கும். தேவையானவர்களுக்கு வளங்கள் கிடைக்காமல் திசை மாறக்கூடும்.இதனை தீர்ப்பதில் தடைகள் இருந்தபோதிலும், பல பெரிய பிரச்னைகளில் நாம் ஒரே நேரத்தில்முன்னேற முடியுமென்பதற்கு இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை விட சிறந்த ஆதாரம் எதுவும் இல்லை.
கேட்ஸ் பவுண்டேஷன் பணிகளுள் பருவநிலை மாற்றத்தால் கொண்டைக்கடலை செடிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பானவை அடங்கும். 10 சதவீதம் அதிகமான மகசூல் மற்றும் வறட்சியை எதிர்க்கும் கொண்டைக்கடலை வகைகள் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அங்குள்ள பெரும்பாலான பிரச்னைகளை அளவிடாமல், உங்களால் தீர்க்க முடியாது. இருப்பினும் போலியோ, எச்.ஐ.வி., பரவல் குறைப்பு , வறுமையை குறைத்தல், குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு, சுகாதாரம், நிதி சேவைகளை அதிகரித்தல் போன்ற பெரிய சவால்களை திறம்பட தீர்த்துள்ளது.இத்தகைய பிரச்னைகளை தீர்க்க உதவும் இந்தியாவின் உலகளாவிய புதுமைக்கான அணுகுமுறை பாராட்டுக்குரியது. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இன்றைய மிகப்பெரிய சவால்களில் முன்னேற்றம் காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave your comments here...