ராஜஸ்தானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – அதிஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை..!
ராஜஸ்தானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு நேரிட்ட விபத்தில் 8 ரயில் பெட்டிகள் கவிழ்ந்தன. மும்பை பாந்தரா – ஜோத்பூர் இடையே இயக்கப்படும் சூரியநகரி விரைவு ரயில் அதிகாலை மூன்றரை மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் சென்று கொண்டிருந்தது.
தார் பாலைவனத்தின் ஒரு பகுதியான மர்வார் ரயில் நிலையத்தை கடந்த போது பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் தண்டவாளத்தை விட்டு விலகிய 8 பெட்டிகள் கவிழ்ந்துவிட்டன. பயணிகளின் அபய குரலை கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள், அனைவரையும் மீட்டனர்.
விபத்தில் காயமடைந்த பயணிகள் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவழியில் சிக்கி தவித்த பயணிகள் பேருந்து மூலம் ஜோத்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ரயில் தடம் புரண்டுள்ளதால் பாந்தரா – ஜோத்பூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Leave your comments here...