ராணுவ தேர்வில் வெற்றி – இந்திய போர் விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் பைலட் சானியா மிர்சா..!
இந்திய விமானப்படையின் போர்ப் படையில் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சானியா மிர்சா முதல்முறையாக பைலட்டாகியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைவதற்காக நடைபெற்ற தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சானியாமிர்சா என்ற முஸ்லிம் பெண் இந்திய அளவில் 149-வது இடத்தை பிடித்தார். அவர் விமானப்படையின் போர் விமான பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார்.
அதன் காரணமாக அவரே நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானி ஆவார் என்று ஊடகங்களில் தகவல் பரவியது. விமானப்படையில் அவருக்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பாக இந்திய விமானப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய பாதுகாப்பு அகாடமியானது முப்படை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகளையே மேற்கொள்வார்கள். இறுதி ஆண்டின்போது சம்பந்தப்பட்ட படைப் பிரிவுக்கான பிரத்தியேக பயிற்சிகளை பெறுவார்கள்.
முக்கியமாக விமானப்படையில் இணையும் அதிகாரிகளுக்கு கடைசி 6 மாதங்களிலேயே விமானிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் (சானியா மிர்சா) இந்திய விமானப் படையில் விமானியாக இணைக்கப்பட இன்னும் 4 ஆண்டுகள் ஆகும். இந்த காலகட்டத்தில் அவர் விமான படைக்கான பல்வேறு பிரத்தியேக பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். போர் விமானிக்கான திறனையும், தகுதியையும் அவர் பெற வேண்டும். அவரது எதிர்காலம் சிறக்கவும், கனவுகள் நனவாகவும் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த சானியா மிர்சாவின் தந்தை டி.வி. பெட்டிகளை பழுது பார்க்கும் பணியை செய்து வருகிறார். சானியா மிர்சா 12-ம் வகுப்பில் இந்தி வழியில் படித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த அவ்னி சதுர்வேதி கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் போர் விமானி ஆனார். அவரை கண்டு ஊக்கம் அடைந்தே தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் வெற்றி பெற்றதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
Leave your comments here...