பொங்கல் பண்டிகை : ரேஷன் அட்டை தாரர்களுக்கு திமுக அரசு ரூ 3,000 வழங்க வேண்டும் – அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

தமிழகம்

பொங்கல் பண்டிகை : ரேஷன் அட்டை தாரர்களுக்கு திமுக அரசு ரூ 3,000 வழங்க வேண்டும் – அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

பொங்கல் பண்டிகை : ரேஷன் அட்டை தாரர்களுக்கு திமுக அரசு ரூ 3,000 வழங்க வேண்டும் – அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும், பயிர் விளையக் காரணமாக இருந்த பகலவனை வழிபடும் நாளாகவும், ஆண்டு முழுவதும் அரும்பணி புரிந்த கால்நடைகளுக்கு காணிக்கையாக்கும் நாளாகவும் பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் சாதி, மத பேதமின்றி நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி-சேலை வழங்குவது, பொங்குல் தொகுப்பு வழங்குவது, ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும், ஜவுளி மற்றும் கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, ஏழையெளிய மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டுமென்ற நோக்கத்திலும் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1983 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்கள். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கமும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் அடித்தளமிட்டவர், மூல காரணமாக விளங்கியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இந்த சூழ்நிலையில், 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் அறிவித்தாலும், தவறிழைத்த நிறுவனங்களுக்கு மீண்டும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதே தவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை என்றும், பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள்தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கான திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது, அந்தத் திட்டங்கள் மக்களை முழுவதும் சென்றடைகிறதா, அதன் பலன் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், சென்ற ஆண்டு பொங்கல் திட்டத்தின்போது இந்தக் கடமையை சரிவர நிறைவேற்ற தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றே மக்கள் கருதுகிறார்கள். அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.

இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும். தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave your comments here...