பாஜகவிடம் இருந்து டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி.!
மொத்தம் 250 வார்டு உறுப்பினர்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால், காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் இரண்டு மணி நேர வாக்கு எண்ணிக்கை போக்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு போகும் என்பதை கணிக்க முடியாதபடி இருந்தது. ஆனால், பகல் 12 மணிக்குப் பின்னர் ஆம் ஆத்மி தொடர்ச்சியாக முன்னிலை பெற்றது. மதியம் 2 மணியிலிருந்தே ஆம் ஆத்மி வெற்றி முகம் காணத் தொடங்கியது. பின்னர், மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 104 வார்டுகளுடன் பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது.
தேசிய அரசியலில் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகக் கருதப்படுகிறது. 2 முறை டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி, இப்போது டெல்லி மாநகராட்சித் தேர்தலில் வெற்றி என 8 ஆண்டுகளில் 4 மிகப்பெரிய வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி உரை: தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுக்கும் மக்களுக்கும் வெற்றி உரையாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், “எங்களுக்கு வெற்றியை அள்ளித்தந்த டெல்லி மக்களுக்கு அன்பும் நன்றியும். டெல்லியை மேம்படுத்த மத்திய அரசின் உதவி வேண்டும். பிரதமரின் ஆசி வேண்டும்.
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களே… நீங்கள் இனி உங்களை கட்சிக்காரர்களாக நினைக்காதீர்கள். நீங்கள் அந்தந்த வார்டின் ஓர் அங்கம். இனி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். நாம் ஒன்றிணைந்து ஊழலை ஒழிக்க வேண்டும். இனி அரசியலுக்கு இடமில்லை. தேர்தலுக்கான அரசியல் எல்லாம் முடிந்துவிட்டது. இனி நாம் டெல்லியை மேம்படுத்தும் பணிகளில் கவனத்தைக் குவிப்போம். எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. எங்களுக்கு வாக்களிக்காதவர்களை அறிந்து அவர்களின் குறைகளை முதலில் நிவர்த்தி செய்வோம்” என்றார்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா “இன்று டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு வெற்றி தருவதோடு நிற்கவில்லை. பாஜகவை, அதன் ஊழலை தோற்கடித்துள்ளனர். 15 ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு டெல்லி மாநகராட்சியை ஆட்டிவைத்தவர்களின் அதிகாரம் பறிபோயுள்ளது. எங்கள் மீது இப்போது பெரும் பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது. மக்கள் ஆம் ஆத்மி வழியில் நேர்மையுடன் வாக்களித்துள்ளனர்” என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
Leave your comments here...