மானாவாரி நிலத்திலும் மரம் வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்! காவேரி கூக்குரல் சார்பில் விருதுநகரில் சிறப்பு கருத்தரங்கு
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மானாவாரி நிலங்களில் மரப் பயிர் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டுவது தொடர்பான கருத்தரங்கு விருதுநகரில் நவம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் சுமார் 40 சதவீதத்திற்கு மேற்பட்ட நிலப்பரப்பு மானாவாரி நிலமாக உள்ளது. மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண்ணுக்கேற்ற மரங்களை சாகுபடி செய்தால் அதன் மூலம் நல்ல வருவாய் ஈட்ட முடியும். குறிப்பாக, சந்தனம், செம்மரம், கொடுக்காபுளி, இலுப்பை, வேம்பு, நாட்டுவாகை, நாவல், பலா போன்ற விலைமதிப்புமிக்க டிம்பர் மரங்கள் வறட்சியை தாங்கி வளரும் திறன் கொண்டவை.
இம்மரங்கள் வளர்க்க வறண்ட பகுதிகளில் பெய்யும் 6 – 8 சதவீத மழைநீரே போதுமானது. மேலும், ஆரம்ப காலங்களில் ஓரளவு பராமரித்தாலே உயிர் பிடித்து வளர்ந்துவிடும். இம்மரங்களை வழக்கமாக செய்யும் பயிர்களுடன் நடவு செய்யலாம் அல்லது இம்மரங்களை மொத்தமாக நடவு செய்து மானாவாரி நிலத்தில் ஒரு தோப்பை உருவாக்கலாம்.
மத்திய அரசு முன்னேற்றத்தை நாடும் மாவட்டங்கள் (Aspirational Districts) என இந்தியாவில் 117 மாவட்டங்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதில் தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களும் அடங்கும். இந்த திட்டத்தின் மூலம் அந்தந்த மாவட்ட விவசாயிகள் மத்திய அரசின் உதவியை பெற்று அவர்களது நிலங்களில் மரப்பயிர் சாகுபடி செய்யலாம். காவேரி கூக்குரல் இயக்கமானது மரம் சார்ந்த விவசாயம் குறித்த பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இதுவரை சுமார் 24 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு நாங்கள் விநியோகித்துள்ளோம். தற்போது மானாவாரி விவசாயிகளுக்கு பிரத்யேகமாக இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.
சாத்தூரில் உள்ள ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பங்கேற்று பேச உள்ளனர். குறிப்பாக, நிலத்தின் உரிமையாளரும் ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநருமான திரு. ராமமூர்த்தி வேப்ப மரத்தில் இருந்து லாபம் எடுக்கும் வழிமுறைகளை பகிர உள்ளார். தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் ‘கொடுக்காப்புளி’ மர வளர்ப்பு குறித்தும், பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராஜன் சந்தன மர வளர்ப்பு குறித்தும், செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் குருசாமி இலுப்பை மர வளர்ப்பு குறித்தும் பேச உள்ளார். இதுதவிர, நாவல், செம்மரம், நாட்டு வாகை, பலா மர வளர்ப்பு குறித்தும் முன்னோடி விவசாயிகள் பேச உள்ளனர். இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 90025 90079 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்றார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகங்கை மாவட்ட விவசாயிசம்பத், மதுரை பேரையூர் விவசாயி திரு.வாசிமலை ஆகியோர் உடன் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக அனைத்து வகையான டிம்பர் மரக்கன்றுகளும் ரூ.3-க்கு விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...