வடகிழக்கு பருவமழை : சதுரகிரிமலைக்கு, பக்தர்கள் செல்ல தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த மலைக் கோவிலுக்கு, ஒவ்வொரு பிரதோஷம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப் படுவார்கள். மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த இரண்டு பிரதோஷங்கள், அமாவாசை மற்றும் பௌர்ணமி தரிசனத்திற்காக, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாளை 21ம் தேதி (திங்கள் கிழமை), கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் நாளில், சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் துவங்கியிருப்பதாலும், நாளை முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது பலத்தமழையும் பெய்து வருகிறது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, நாளை 21ம் தேதி முதல், வரும் 24ம் தேதி வரையில், சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசை தினங்களில் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் இதனால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Leave your comments here...