ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் : தீவிரவாத தாக்குதல் – கர்நாடக டிஜிபி அறிவிப்பு.!
கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்து செல்லப்பட்டபோது வெடிவிபத்து ஏற்பட்டதா? அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட குக்கரில் வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்பை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
இந்த நிலையில், ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் விபத்து அல்ல என கர்நாடக டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல. பெரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். மேலும், ஆட்டோவில் இருந்த அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார் உயர்மட்ட விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ பயணி, கர்நாடகாவின் ஹப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒருவருடைய ஆதார் அட்டையை திருடி அதனை பயன்படுத்திய அதிர்ச்சி விவரம் தெரிய வந்து உள்ளது.
இந்திய ரயில்வேயின் துமகுரு மண்டல ரெயில்வே பணியாளர் பிரேம்ராஜ் ஹுடாகி என்பவரின் ஆதார் அட்டையே திருடு போயுள்ளது. அவரது ஆதார் அட்டையை அவர் கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு முறை தொலைத்துள்ளார். ஆனால், தொலைந்த சரியான இடம் தனக்கு தெரியும் என அவர் கூறுகிறார்.
இதுபற்றி பிரேம்ராஜ் கூறும்போது, காவல் துணை ஆய்வாளர் 7.30 மணியளவில் என்னை தொலைபேசியில் அழைத்து, ஆதார் அட்டையை நான் எங்கு தொலைத்தேன்? என என்னிடம் கேட்டார். என்னுடைய பெற்றோர் விவரம் உள்பட எல்லா விவரங்களையும் கேட்டறிந்து உள்ளார். எனது புகைப்படம் உள்பட அனைத்து விசயங்களையும் கொடுத்து விட்டேன் என கூறுகிறார். எனக்கு, போலீசார் தகவல் கூறிய பின்பே மங்களூரு வெடிவிபத்து சம்பவம் பற்றி தெரியும். அதனுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எனது ஆதார் அட்டை சம்பவ பகுதியில் இருந்து கிடைத்தது என கூறினர். ஆதார் அட்டை தொலைந்தது உண்மை. ஆனால் அது மங்களூருவில் அல்ல என கூறியுள்ளார். அவரிடம் ஆதார் அட்டையின் ஐ.டி. இருந்துள்ளது. அதனை கொண்டு மற்றொரு ஆதார் அட்டையை நகல் எடுத்து உள்ளார். இதனால், அது தொலைந்தது பற்றி புகார் அளிக்கவில்லை. இந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படும் என தனக்கு தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஆட்டோ பயணி, பேட்டரி மற்றும் வெடிகுண்டு ஆகியவை இணைக்கப்பட்ட குக்கர் ஒன்றை எடுத்து சென்றுள்ளார் என கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் உறுதிப்படுத்தி உள்ளார். அது வெடித்ததில், பயணி, ஓட்டுனர் என இருவரும் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சையில் உள்ளனர். குற்றவாளியான பயணியால் போலீசாரிடம் பேச முடியவில்லை. அந்த குற்றவாளி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய அந்த நபர் கோவையில் இருந்து போலியான பெயரில் சிம் கார்டு வாங்கியுள்ளார். செல்போன் டவர் சிக்னலின்படி, அந்த நபர் தமிழகத்திற்கு பயணித்து உள்ளார். அதனால், அவர் யாரிடம் எல்லாம் செல்போன் வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்ற விவரங்களை தீர விசாரித்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அவரது கூட்டாளிகளை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது என்று டி.ஜி.பி. கூறியுள்ளார்.
இந்நிலையில், மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராம பகுதியை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதகையை சேர்ந்த நபரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியது அம்பலமாகியுள்ளது. மேலும் அந்த நபரை கோவை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், மங்களூரு ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் கோவை கும்பலுடன் குற்றவாளி தொடர்புடையவரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave your comments here...